சிற்றம்பலத்து - அங்குள்ள ஞான சபையிலுள்ள, எங்கள் செல்வம் பாடி - எமது செல்வமாகிய பெருமானைப் பாடி, கட்டிய மாசுணக் கச்சை பாடி - அரையிற்கட்டிய பாம்புக் கச்சையினைப் பாடி, கங்கணம் பாடி - கையில் சுற்றியுள்ள கங்கணம் பாடி, கவித்த கைம்மேல் - மூடின கையின்மேல், இட்டு - வைக்கப்பட்டு, நின்று ஆடும் - படமெடுத்து ஆடுகின்ற, அரவம் பாடி - பாம்பைப் பாடி, ஈசற்கு - இறைவனுக்கு, சுண்ணம் - வாசனைப்பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம். விளக்கம் : ஊமத்தம் ‘மத்தம்’ என முதற்குறையாயிற்று. இறைவனுக்கு உகந்த மலர்களுள் ஊமத்தம் ஒன்று. சிஷ்டர் என்ற வடமொழிச்சொல் சிட்டர் என வந்தது. மூடிய கைம்மேல் அரவத்தை இட்டு ஆட்டியது : திருப்புறம்பயத்தில் ஓர் அடியவள்பொருட்டு இறைவன் பாம்பாட்டியாய்ச் சென்று, பாம்பு தீண்டி மாண்ட அவள் கணவனை உயிர்ப் பித்தருளினன். கச்சாகவும் கங்கணமாகவும் அணிந்த ஏனையவை, தாருகாவனத்து முனிவர்கள் இறைவன் மேல் ஏவப்பட்டவையாம். இதனால், இறைவனது அணி கூறப்பட்டது. 19 வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியு மாம்இருள் ஆயினார்க்குத் துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப் பந்தமு மாய்வீடும் ஆயினாருக் காதியும் அந்தமும் ஆயினாருக் காடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே. பதப்பொருள் : வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு - வேத நூலும் அவற்றுள் கூறப்படும் யாகங்களும் ஆனவரும், மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு - மெய்ப்பொருளும் பொய்ப்பொருளும் ஆனவரும், சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு - ஒளியுமாகி இருளும் ஆனவரும், துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு - துன்பமுமாகி இன்பம் ஆனவரும், பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு - பாதியுமாகி முழுதுமானவரும், பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு - உயிர்களுக்குப் பந்தமும் ஆகி வீடும் ஆனவரும், ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு - உலகுக்கு முதலும் முடிவுமானவரும் ஆகிய இறைவருக்கு, ஆட - நீர் ஆடும் பொருட்டு, பொற்சுண்ணம் - பொன் போலும் வாசனைப் பொடியை, நாம் இடித்தும் - நாம் இடிப்போம்.
|