பக்கம் எண் :

திருவாசகம்
32


பின்னரே சிவ மணம் கமழும் என்பார். "நாற்றத்தின் நேரியாய்" என்றார். "பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது" என்ற திருமூலர் வாக்கும் நினைவு கொள்ளத்தக்கது.

அன்பரல்லாதார்க்குத் தொலைவிலும், அன்பருக்கு அண்மையிலும் இருப்பான் இறைவன் என்பார் "சேயாய் நணியானே" என்றும், அவ்வடியவர் இறைவனை எண்ணுந்தோறும் அவர்க்கு இன்பம் உண்டாகும் என்பார், "சிந்தனையுள் தேனூறி நின்று" என்றும் கூறினார். "இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே" என்ற திருமுறை வாக்கும் இதனை வலியுறுத்துகிறது.

இவற்றால் இறைவனது ஐந்தொழில்கள் கூறப்பட்டன.

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

50. மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

55. மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி

60. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே.

பதப்பொருள் : நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் - ஐந்து நிறங்களை உடையவனே, விண்ணோர்கள் ஏத்த - தேவர்கள் துதிக்க, மறைந்து இருந்தாய் - அவர்களுக்கு ஒளிந்திருந்தவனே, எம்பெருமான் - எம் பெருமானே, வல்வினையேன் தன்னை - வலிய வினையையுடையவனாகிய என்னை, மறைந்திட மூடிய - மறையும்படி மூடியுள்ள, இருள் மாய - அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, அறம் பாவம் என்னும் - புண்ணிய பாவங்கள் என்கின்ற, அருங்கயிற்றால் கட்டி - அறுத்தற்கு அருமையாகிய கயிற்றால் கட்டப்பெற்று, புறம்தோல் போர்த்து - வெளியே தோலால் மூடி, எங்கும் புழு அழுக்கு மூடி - எவ்விடத்தும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் சோரும் - மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயில் குடில் - ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை, மலங்க - குலையும்படி, புலன் ஐந்தும் - ஐம்புலன்களும், வஞ்சனையைச் செய்ய - வஞ்சனை பண்ணுதலால், விலங்கும் மனத்தால் -