பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! உள்ளப்படாத - மனத்தினால் நினைக்க இயலாத, திருவுருவை - திருவுருவத்தை. உள்ளுதலும் - நினைத்தலும், கள்ளப்படாத - மறைத்தல் இல்லாத, களிவந்த - மகிழ்ச்சி உண்டாக்கத்தக்க, வான் - மேலான, கருணை வெள்ளப் பிரான் - அருள் வெள்ளத்தையுடைய பெருமான், எம்பிரான் - எம் இறைவன், என்னை - அடியேனை, வேறே - தனியாக, ஆட்கொள் - அடிமைகொண்ட, அப்பிரானுக்கு - அந்த இறைவனிடத்திலேயே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. விளக்கம் : இறைவன் கரணம் கடந்த பெருமானாதலின், ‘உள்ளப்படாத திருவுரு’ என்றார். ஆனால், பதி ஞானத்தினாலே நினைக்கலாமாதலின், ‘உள்ளுதலும்’ என்றார். ‘தனியாக ஆட்கொண்டான்’ என்றது, ‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை’ போன்ற தவ விரதங்கள் இல்லாதிருக்கவும் தம்மை ஆட்கொண்டான் என்பதாம். இதனால், இறைவன் தன்னை நினைப்பவர்க்கு வந்து அருள் செய்வான் என்பது கூறப்பட்டது. 16 பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்றன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! பொய்யாய செல்வத்தே - நிலையில்லாப் பொருளின்கண், புக்கு அழுந்தி - போய் அழுந்தி, நாள்தோறும் - தினந்தோறும், மெய்யாக் கருதிக் கிடந்தேனை - உண்மைப் பொருளென்று எண்ணிக் கிடந்த என்னை, ஆட்கொண்ட - அடிமை கொண்ட, ஐயா - தலைவனே, என் ஆர் உயிரே - எனது அருமையான உயிரே, அம்பலவா - அம்பலவாணா, என்ற - என்று என்னால் புகழப் பெற்ற, அவன்தன் - அப்பெருமானது, செய் ஆர் - செம்மை பொருந்திய, மலர் அடிக்கே - தாமரை மலர் போலும் திருவடியினிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக. விளக்கம் : பொய்யாய செல்வமாவன மண், பொன் முதலியன. இச்செல்வத்தை உண்மையென எண்ணியவர் மேல்நிலைக்கு வரமாட்டா ராதலின், ‘புக்கு அழுந்தி’ என்றார். இதையே ‘பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் மருள்’ என்றார் நாயனார். இதனால், இறைவனது திருவடியே நிலையான செல்வம் என்பது கூறப்பட்டது. 17
|