பக்கம் எண் :

திருவாசகம்
321


தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ.

பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! தோலும் துகிலும் - புலித்தோலும் மெல்லிய ஆடையும், குழையும் சுருள் தோடும் - குண்டலமும் சுருண்ட தோடும், பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் - பால் போன்ற வெண்மையான திருநீறும் புதிய சந்தனத்துடன் பசுமையான கிளியும், சூலமும் தொக்க வளையும் - முத்தலை வேலும் தொகுதியான வளையலும், உடை - உடைய, தொன்மைக் கோலமே - பழமையான வடிவத்தையே, நோக்கி - பார்த்து, குளிர்ந்து ஊதாய் - இனிமையாய் ஊதுவாயாக.

விளக்கம் : தோல், குழை, நீறு, சூலம் என்பவற்றை இறைவனுக்கும், துகில், தோடு, சாந்து, கிளி, வளை என்பவற்றை இறைவிக்கும் அமைத்துக் கொள்க. வளை பலவாதலால் ‘தொக்கவளை’ என்றார். சிவமும் சத்தியுமாய் உள்ள நிலை இறைவனுக்கு அனாதியானதாகலின், ‘தொன்மைக் கோலம்’ என்றார்.

இதனால், இறைவனது அர்த்த நாரீசுவர வடிவம் கூறப்பட்டது.

18

கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே
உள்ளத் துறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்
தெள்ளும் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! இவன் - இவன், கள்வன் - கரவு உடையவன், கடியன் - கொடுமையானவன், கலதி - கீழ்மகன், என்னாது - என்று எண்ணி ஒதுக்காமல், வள்ளல் - வரையாது வழங்கும் இறைவன், வரவர - நாளுக்குநாள், என் மனத்தே - என் மனத்தின்கண்ணே, வந்தொழிந்தான் - வந்து தங்கிவிட்டான், உள்ளத்து உறு - மனத்திற்பொருந்திய, துயர் - துயரம், ஒன்றொழியாவண்ணம் - ஒன்றுவிடாத படி, எல்லாம் - எல்லாவற்றையும், தெள்ளும் - களைந்து எறியும், கழலுக்கே - திருவடியினிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் : கலதி - மூதேவி. அது, தாமத குணத்தை உடைமையைக் குறித்தது. தீமை கருதாது வாரி வழங்குகின்றானாதலின், இறைவனை ‘வள்ளல்’ என்றார். இறைவன் மனத்தை இடமாகக்கொண்டு தங்கினமையால் மனத்தைப்பற்றிய துயரம் எல்லாம் விலகும் என்பார், ‘துயரொன்றொழியா வண்ணமெல்லாம் தெள்ளும்’ என்றார்.