பக்கம் எண் :

திருவாசகம்
323


11. திருத்தெள்ளேணம்

தில்லையில் அருளிச்செய்தது

தெள்ளேணம் என்பது மகளிர் விளையாட்டுகளுள் ஒன்று.

சிவனோடடைவு

‘சிவனோடடைவு’ என்பது சிவனிடத்தில் அடைந்து நிற்றல் என்பதாம்.

நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா

திருச்சிற்றம்பலம்

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

பதப்பொருள் : திருமாலும் - திருமாலும், பன்றியாய் - பன்றி உருவெடுத்து, சென்று உணரா - மண்ணிடந்து சென்றும் உணரவியலாத, திருவடியை - திருவடி மலரினை, நாம் உரு அறிய - நாம் உருவமாகக் கண்ணால் பார்க்கும்படி, ஓர் அந்தணன் ஆய் - ஒரு வேதியனாய் வந்து, ஆண்டுகொண்டான் - ஆட்கொண்டருளினவனாகிய, ஒரு நாமம் - ஒரு பெயரும், ஓர் உருவம் - ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாற்கு - ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருநாமம் பாடி - ஆயிரம் திருப்பெயர்களைக் கூறி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

விளக்கம் : அருவமாய், உணர்ச்சியிலும் படாத பெருமான் தமக்கு உருவமாய், காட்சியிலும் தோற்றமளித்தான் என்பார், ‘உரு நாம் அறியவோர் அந்தணனாய்’ என்றார். தனக்கென வரையறைப்பட்ட வடிவமும், அதற்குரிய பெயரும், தொழிலும் இலானாதலின், இறைவனை, ‘ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லான்’ என்றார். பெயர், வடிவம், தொழில் என்பன ‘நாம ரூபக் கிரியைகள்’ எனப்படும். அவற்றுள், நாமத்தையும் ரூபத்தையும் எடுத்துக் கூறினமையால். ‘ஒன்று’ என்றது தொழிலைக் குறிப்பதாயிற்று. ‘உருவொடு தொழில் பெயர் ஒன்றும் இன்றியே - பரவிய நீ’ என்பது கந்தபுராணம். இனி, அருள் காரணமாகப் பலவகைத் திருமேனிகளையும், பெயர்களையும், தொழில்களையும் இறைவன் தாங்கி நிற்றலின், ‘ஆயிரம் திருநாமம் பாடி’ எனக் கூறினார். ‘பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மான்’ என்றார் திருநாவுக்கரசரும். ஆயிரம் என்பது எண்ணற்ற பொருளில் வந்தது.