பக்கம் எண் :

திருவாசகம்
324


‘கொட்டாமோ’ என்பதை, ‘கொட்டுவோம்’ என்பது வகர இடைநிலை தொகப்பெற்று நின்றதாகவும், இரண்டு எதிர்மறை ஓர் உடன்பாட்டினை உணர்த்தியதாகவும் உரைப்பர். இது, பின்வருகின்ற ‘பூவல்லி கொய்யாமோ’ முதலியவற்றிற்கும் பொருந்தும்.

இதனால், இறைவனது திருநாமத்தைப் பாடிப் பரவ வேண்டும் என்பது கூறப்பட்டது.

1

திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.

பதப்பொருள் : திரு ஆர் - அழகு நிறைந்த, பெருந்துறை - திருப்பெருந்துறையில், மேய - எழுந்தருளிய, பிரான் - பெருமான், என் பிறவிக்கரு - எனது பிறவிக்கு மூலமாயிருக்கிற, வேர் அறுத்த பின் - வேரை அறுத்த பின்னர், யாவரையும் கண்டது இல்லை - அவனைத் தவிரப் பிறரொருவரையும் நான் பார்த்ததில்லை. ஆதலின், அருவாய் - அருவமாய், உருவமும் ஆய பிரான் - உருவமும் கொண்டு நின்ற பெருமானாகிய, அவன் மருவும் - அவன் எழுந்தருளியிருக்கிற, திருவாரூர் பாடி - திரு வாரூர் என்னும் திருப்பதியைப் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

விளக்கம் : பற்றுள்ள போதுதான் மனம் உலகப்பொருள்களின்மேல் செல்லும்; பற்று அறுமாயின், செல்லாது. மனம் செல்லாத போது உலகப் பொருள் காட்சியளியாது. அந்நிலையையே, ‘கருவேர் அறுத்த பின் யாவரையுங் கண்டதில்லை’ என்றார். இறைவன் பழமையாக விரும்பி எழுந்தருளியிருக்கும் இடங்களுள் திருவாரூர் ஒன்றாதலின், ‘அவன் மருவுந் திருவாரூர் பாடி’ என்றார். ‘திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே’ என்றார் திருநாவுக்கரசர்.

இதனால், இறைவனது ஊரைப் பாடிப் பரவ வேண்டும் என்பது கூறப்பட்டது.

2

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவரகட்குந்
தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட் டுலகமெல்லாஞ்
சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

பதப்பொருள் : அரிக்கும் - திருமாலுக்கும், பிரமற்கும் - பிரமனுக்கும், அல்லாத தேவர்கட்கும் - அவர்களையொழிந்த