பக்கம் எண் :

திருவாசகம்
325


மற்றைய தேவர்களுக்கும், தெரிக்கும் படித்தன்றி நின்ற - தெரிந்து சொல்லும்படியில்லாமல் நின்ற, சிவம் - பரமசிவன், வந்து - தானே எழுந்தருளி வந்து, நம்மை உருக்கும் - நம்மை மனம் உருகப் பண்ணினான்; பணி கொள்ளும் - அடிமை கொண்டான், என்பது கேட்டு - என்று நாம் கூறுவதைக் கேட்டு, உலகம் எல்லாம் - உலகத்தவரெல்லாம், சிரிக்கும் திறம் பாடி - சிரிக்கின்ற நிலையைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம்.

விளக்கம் : பொன்னை உருக்கியே பணி செய்வது போல, மனத்தை உருக்கியே பணி கொள்வான் என்பார், ‘சிவம் வந்து நம்மை உருக்கும் பணி கொள்ளும்’ என்றார். ‘தகுதியற்ற இவர்களை எங்கே இறைவன் வந்து ஆட்கொள்ளப்போகிறான்’ என்று கருதி உலகவர் நகைக்கின்றனர் என்பார். ‘உலகமெல்லாம் சிரிக்கும்’ என்றார்.

இதனால், இறைவன் ஆட்கொள்ளும் முறைமை உலகத்தவர் அறியார் என்பது கூறப்பட்டது.

3

அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ!

பதப்பொருள் : அவம் ஆய தேவர் - பயனற்ற தேவர்களுடைய, அவகதியில் அழுந்தாமே - அற்ப இன்பந்தரும் பதங்களில் தங்காமல், பவமாயம் காத்து - பிறவியாகிய மயக்கத்தினின்றும் காத்து, என்னை ஆண்டுகொண்ட - என்னையாண்டருளின, பரஞ்சோதி - மேலான ஒளி வடிவினன், நவமாய - புதுமையான, செஞ்சுடர் நல்குதலும் - செம்மையாகிய ஞானத்தை அருளியதும், நாம் ஒழிந்து - நம்முடைய தன்மை கெட்டு, சிவம் ஆன ஆ பாடி - சிவத்தினது தன்மையைப் பெற்ற வழியைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம்.

விளக்கம் : அற்ப இன்பத்தைக் கொடுத்து மீண்டும் பிறப்புட் செலுத்துகின்ற பதவிகளைப் கொடுப்பவர்கள் தேவராதலின், ‘அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே’ என்றார். நாம் ஒழிந்து சிவமாதல் என்பது, ஆன்மாவினது அறிவு இச்சை செயல் இறைவனது அறிவு இச்சை செயலுக்கு உட்பட்டிருத்தலாம். அஃதாவது, எல்லாம் சிவன் செயல் என்றிருத்தலாம். இதனையே திருவுந்தியார் என்னும் சாத்திரம், ‘நஞ்செயலற்றிந்த நாமற்ற பி்ன் நாதன் தன் செய்ல தானேயென் றுந்தீபற’ என்று கூறும்.

இதனால், இறைவன் பணி கொண்ட பின் உண்டாகும் நிலை கூறப்பட்டது.

4