அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம் உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த திருவந்த வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : அருமந்த தேவர் - அருமருந்தை உண்ட தேவர் களாகிய, அயன் திருமாற்கு - பிரமன் திருமால் என்னும் இவர்களுக்கும், அரிய சிவம் - காண்டற்கு அரிய சிவபெருமான், உருவந்து - மானிட உருவம் கொண்டு, பூதலத்தோர் உகப்பு எய்த - நிலவுலகத்தோர் மகிழ்ச்சி யடையும்படி, கொண்டருளி - என்னை அடிமை கொண்டருளி, கரு வெந்து வீழ - பிறவிக்குக் காரணமாகிய வினைக் காடு எரிந்து விழும்படி, கடைக் கணிந்து - கடைக்கண்ணால் திரு நோக்கம் பாலித்து, என் உள்ளம் புகுந்த திரு - என் மனத்தே புகுந்த திருவருட்செல்வம், வந்த ஆ பாடி - வந்த முறையைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணேம் கொட்டுவோம். விளக்கம் : அருமருந்து - அமுதம். ‘ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் இறைவன் வந்த ஆட்கொண்டமையால், தங்களையும் அவ்வாறு ஆட்கொள்வான் என்ற உலகத்தவர் மகிழ்ச்சியுற்றனர்’ என்பார், ‘பூதலத்தோர் உகப்பெய்த’ என்றார். மூவகை வினைகளில் சஞ்சித வினை குருவின் திருநோக்கால் அழியுமாதலின், ‘கருவெந்து வீழக் கடைக்கணித்து’ என்றார். இதனை ‘நயன தீக்கை’ என்பார். இதனால், இறைவன் திருநோக்கம் வினைக்காட்டை அழிக்கும் என்பது கூறப்பட்டது. 5 அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம் உரையாட உள்ளொளி யாடஒண்மாமலர்க் கண்களில்நீர்த் திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : அரை - திருவரையில், ஆடு - படம் விரித்தாடுகின்ற, நாகம் - பாம்பை, அசைத்த பிரான் - கச்சையாகக் கட்டிய சிவபெருமான், அவனியின்மேல் - நிலவுலகின்மீது, வரை ஆடு - மலையின்மேல் விளையாடிய, மங்கைதன் பங்கொடும் வந்து - பார்வதி பாகத்தோடும் எழுந்தருளி வந்து, ஆண்ட திறம் - ஆட்கொண்ட வகையை, உரை ஆட - சொற்கள் தடுமாறவும், உள் ஒளி ஆட - உள்ளே ஒளி விளங்கவும், ஒள் - ஒளியையுடைய, மா - பெரிய, மலர்க்கண்களில் - தாமரை மலர் போலும் கண்களில், நீர்த்திரை ஆடும் ஆறு - நீர் அலை பெருகும் நிலையை, பாடி - நாம் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம்.
|