விளக்கம் : மலையரசன் மகள் மலையிலே விளையாடும் இயல்புடை யளாதலின், ‘வரையாடு மங்கை’ என்றார். இறைவன் செய்த உதவியை எண்ணினால் நாத் தழுதழுக்குமாதலின், ‘உரையாட’ என்றார். உள்ளத்தில் உண்டாகும் ஒளி கண்ணில் விளங்கித் தோன்றுமாதலின், ‘ஒண்மாமலர்க்கண்’ என்றார். ‘நீர்த்திரை’ கண்ணீர் மிகுதியைக் காட்டிற்று. இதனால், இறைவன் ஆண்ட திறத்தினை உணர்ச்சி ததும்பப் பாட வேண்டும் என்பது கூறப்பட்டது. 6 ஆவா அரிஅயன்இந் திரன்வானோர்க் கரியசிவன் வாவாவென் றென்னையும் பூதலத்தே வலித்தாண்டுகொண்டான் பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே தேவான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : ஆவா - அந்தோ, அரி - திருமால், அயன் - பிரமன், இந்திரன் - இந்திரன், வானோர்க்கு - மற்றைத் தேவர்கள் ஆகிய இவர்களுக்கு, அரிய - அருமையாகிய, சிவன் - சிவபெருமான், வாவா என்று - வருக வருகவென்று, என்னையும் - ஒன்றுக்கும் பற்றாத என்னையும், பூதலத்தே - நிலவுலகத்தின் கண்ணே, வலித்து ஆண்டு கொண்டான் - ஈர்த்து ஆட் கொண்டருளி, பூ ஆர் அடி - தாமரை மலர் போன்ற திருவடியினது, சுவடு - அடையாளத்தை, என் தலைமேல் - என் தலையின்மேல், பொறித்தலும் - பதிவித்த அளவிலே, தே ஆன ஆ பாடி - யான் தெய்வத்தன்மையடைந்த திறத்தைப் பாடி, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம். விளக்கம் : இறைவன் திருவடியைச் சூட்டியதும் சிவமாந்தன்மை உண்டாயிற்று என்பார், ‘அடிச்சுவடென் தலைமேற் பொறித்தலுமே தேவானவா பாடி’ என்றார். சிவமாந்தன்மையாவது, பேரின்ப நிலை பெறுவது. திருவடி சூட்டல் பரிச தீக்கையாம். நயன தீக்கையால் வினைக்காடு அழிதலும், பரிச தீக்கையால் ஞானம் பெறுதலுமாம். இதனால், இறைவன் திருவடி ஞானத்தைக் கொடுக்கும் என்பது கூறப்பட்டது. 7 கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும் அறம்பாவ மென்றிரண் டச்சந்த விர்த்தென்னை ஆட்கொண்டான் மறந்தேயும் தன்கழல் நான்மறவா வண்ணம் நல்கியஅத் திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. பதப்பொருள் : கறங்கோலை போல்வதோர் காயம் - காற்றாடி போன்றதோர் உடம்பின், பிறப்போடு - தோற்றத்துடன், இறப்பு என்னும் - அழிவு என்று சொல்லப்படுகின்ற அவற்றின்
|