பக்கம் எண் :

திருவாசகம்
328


காரணங்களாகிய, அறம் பாவம் என்ற - நல்வினை தீவினை என்கிற, இரண்டு அச்சம் தவிர்த்து - இரண்டு அச்சங்களையும் நீக்கி, என்னை ஆண்டு கொண்டான் - என்னை ஆட்கொண்டருளிய பெருமான், மறம் தேயும் - பாவங்கள் தேய்தற்குக் காரணமான, தன் கழல் - தன் திருவடியை, நான் மறவா வண்ணம் - நான் என்றும் மறவாதபடி, நல்கிய அத்திறம் - அருளிய அந்த முறையினை, பாடல் பாடி - பாடலாகப் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ - நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

விளக்கம் : பிறப்பும் இறப்பும் காயத்துக்கு ஆதலின், ‘காயப்பிறப் போடிறப்பென்னும்’ என்றார். கறங்கு - காற்றாடி. கறங்கு + ஓலை = கறங்கோலை. பிறப்பு இறப்புகள் வேகமாக மாறி மாறி வருதலின், அவற்றில் அகப்பட்டுச் சுழலும் உடம்பினைக் கறங்கோலைக்கு ஒப்பிட்டார். இரு வினைகளும் பிறவியைத் தருதலின், ‘அறம் பாவம் என்றிரண்டச்சம்’ என்றார். ‘இருள்சேர் இருவினை’ என்றார் நாயனாரும்.

இதனால், இறைவன் இருவினையினால் வரும் அச்சத்தைப் போக்கி அருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

8

கன்னா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினாற்
பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி
மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்நகையீர்
தென்னாதென் னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ.

பதப்பொருள் : மின் நேர் - மின்னலையொத்த, நுடங்கு இடை - துவள்கின்ற இடையினையும், செந்துவர்வாய் - சிவந்த பவளம் போன்ற வாயினையும், வெள் நகையீர் - வெண்மையான பல்லினையுமுடைய பெண்களே, கல் - கல்லில், நார் உரித்தென்ன - நாரை உரித்தாற்போல, என்னையும் - மனவலியனான என்னையும், தன் கருணையினால் - தனது அருளினால், பொன் ஆர் கழல் பணித்து - பொன் போன்ற அருமையான திருவடிகளில் வணங்கச்செய்து, ஆண்டபிரான் - ஆண்டருளிய பெருமானது, புகழ் பாடி - புகழைப் பாடி, தென்னா தென்னா என்று - தென்னா தென்னா என்று, தெள்ளேணம் கொட்டாமோ - தெள்ளேணம் கொட்டுவோம்.

விளக்கம் : கல்லில் நார் உரிப்பது கடுமையானது ஆதலின், ‘கல் நாருரித்தென்ன’ என்றார். சீவபோதத்தைச் சிவபோதத்தில் அடங்கச் செய்வதே திருவருள் வழங்குவதாதலின், ‘பொன்னார் கழல் பணித்து’ என்று கூறினார். ‘தென்னா’ என்பது இசைக் குறிப்பு.