12. திருச்சாழல் (தில்லையில் அருளிச்செய்தது) சாழல் என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று; இரண்டு கட்சியாய்ப் பிரிந்து விளையாடுவது. இவ்விளையாட்டில் பாடப்படும் பாடல், ஒரு திறத்தாரது கொள்கைக்குத் தடையாய் உள்ள வினாவை மற்றொரு திறத்தார் வினாவுவதும், அதற்கு அவர்கள் விடை சொல்வதுமாய் அமையும் என்பது தெரிகின்றது. இரு திறத்தார் சார்பிலும் ஒவ்வொருவர் முன்வந்து வினாவுவதும், விடை இறுப்பதும் செய்வர் என்பதும் அறியப்படும். சிவனுடைய காருண்யம் (அஃதாவது, சிவனுடைய கருணை) நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ! பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, ஈசன் - உங்கள் இறைவன், பூசுவதும் - பூசிக்கொள்வதும், வெண்ணீறு - வெண்மையான நீறாம்; பூண்பதுவும் - அணியாக அணிவதும், பொங்கு அரவம் - சீறுகின்ற பாம்பாம்; திருவாயால் பேசுவதும் - அவனது திருவாயினால் சொல்லுவதும், மறை போலும் - விளங்காத சொற்கள் போலும் (என ஒருத்தி இகழ்ச்சியாகக் கூறினாள்.) பூசுவதும் - பூசுகின்ற பொருளும், பேசுவதும் - பேசுகின்ற சொற்களும், பூண்பதுவும் கொண்டு என்னை - அணிகின்ற ஆபரணங்களும் ஆகிய இவற்றால் என்ன குறை? அவன் எவ்வுயிர்க்கும் - அவன் எல்லா உயிர்க்கும், இயல்பு ஆனான் - இயல்பாகவே இறைவனாய் இருக்கின்றான் (என்று மற்றொருத்தி விடை கூறினாள்.) விளக்கம் : ‘திருவாயால்’ என்று இகழ்ச்சிக் குறிப்பிற் கூறினாள். இறைவன் எதைப் பூசியும் பேசியும் அணிந்தும் இருப்பவைபற்றி அவனுக்குத் தாழ்வு ஒன்று இல்லை என்பாள், ‘கொண்டு என்னை?’ என்றாள். அவன் எல்லாவுயிர்க்கும் தலைவனாய் இருப்பது
|