அதற்குப் பதிலாகத் தன்னுடைய கண்ணையே இடந்து அர்ச்சித்தான். அந்த அன்பிற்கு இரங்கி உயர்ந்த பொருளாகிய நல்லாழியை இறைவன் நல்கினான். (காஞ்சிப்புராணம்) இதனால், இறைவன் அன்பு வலையில் அகப்படுவன் என்பது கூறப்பட்டது. 18 அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந் தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, புள்ளித்தோல் - புள்ளியையுடைய தோல், அம்பரம் ஆம் - எம்பெருமானுக்கு ஆடையாகும். ஆலாலம் - ஆலகாலவிடத்தை, ஆர் அமுதம் - அருமையான அமுதமாக, எம்பெருமான் உண்ட சதுர் - எம்பிரான் உண்ட திறமையை, எனக்கு அறிய இயம்பு - எனக்குத் தெரியும்படி கூறுவாய். எம்பெருமான் - எம்பெருமான், ஏது உடுத்து - எதனை உடுத்து, ஏது அமுது செய்திடினும் - எதனை அமுது செய்தாலும், தன் பெருமை - தன்னுடைய பெருமையினை, தான் அறியாத் தன்மையன் - தான் நினையாத இயல்புடையவனே. விளக்கம் : ‘தன் பெருமை தான் அறியாத் தன்மையன்’ என்றது, தனது பெருமை நோக்காது எத்துணை எளியவனாயும் போந்து எந்தச் செயலையும் திருவருள் காரணமாகப் பிறர் பொருட்டுச் செய்பவன் எங்கள் இறைவன் என்றதாம். ஆகவே, புள்ளித் தோலை ஆடையாக உடுத்தமை, ஆலாலத்தை ஆரமுதாக உண்டமை முதலிய எல்லாம் அவனுக்குப் பெருமை ஆவனவேயன்றிச் சிறுமையாகா என விடை கூறியபடியாம். இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது. 19 அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ அருந்தவருக் கறம்முதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, அருந்தவருக்கு - அருமையான தவத்தினையுடைய சனகாதியர்பொருட்டு, ஆலின்கீழ் இருந்து - கல்லால மரத்தின் கீழிருந்து, அறம் முதலாம் நான்கினையும் - அறம் முதலாகக் கூறப்படும் நாற்பொருள்களையும், அவர்க்கு அருளுமது - அவர்களுக்கு உரைத்தருளிய காரணத்தை, எனக்கு அறிய இயம்பு - எனக்குத் தெரியும்படி தெளிவாகக் கூறுவாய்.
|