ஆசையதாய்' என்றார். வேண்டுவார்க்கு வேண்டுவதே ஈவானாதலின் சிலம்பொலிக்கத் திருநடனம் செய்கின்றார் என்பார், 'அடியேன் அகமகிழத் திருநடஞ்செய்' என்றார். சிலம்பொலி கேட்டல் திருவருள் வழி நிற்றலாம். அதுவே பேரின்பமாதலின், 'பேரானந்தம் பாடி' என்றார். இதனால், இறைவன் திருவடி இன்பம் கூறப்பட்டது. 18 அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுதல்உத் தரகோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள் : அத்தி உரித்து - யானையை உரித்து, அது போர்த்தருளும் - அந்தத் தோலைப் போர்த்தருளின, பெருந்துறையான் - திருப்பெருந்துறையுடையோனும், இவ்வுலகில் - இவ்வுலகத்தில், பித்த வடிவுகொண்டு - பித்தம் மிகுகின்ற மூப்புடைய உருவத்தைக் கொண்டு, பிள்ளையும் ஆம் - குழந்தையாக மாறுவோனும், முத்தி முழு முதல் - முத்திக்கு முழுமுதலும், உத்தரகோச மங்கை வள்ளல் - திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளிய வள்ளலும் ஆகிய இறைவன், புத்தி புகுந்தவா - என்புத்தியில் நுழைந்த விதத்தைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம். விளக்கம் : 'பித்த வடிவு கொண்டு இவ்வுலகில் பிள்ளையுமாம்,' என்றது, இறைவன் விருத்த குமார பாலரான வரலாற்றைக் குறித்தது. 'ஓரியூரில் உகந்தினி தருளிப் பாரிரும் பாலகனாகிய பரிசும்' என்று கீர்த்தித்திருவகவலில் முன்னரும் கூறினார். உத்தரகோச மங்கையின் அண்மையில் உள்ளது ஓரியூர். உத்தரகோச மங்கையில் அடிகளுக்கு மீண்டும் தரிசனம் கொடுத்தமையின், 'உத்தரகோச மங்கை வள்ளல் புத்தி புகுந்தவா' என்றார். இதனால், இறைவன் வீடு தருவோனாதல் தன்மை கூறப்பட்டது. 19 மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலந் திகழ்ப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள் : பெருந்துறையான் - திருப்பெருந்துறையான், மா ஆர ஏறி - குதிரையைப் பொருந்த ஏறி, மதுரை நகர் புகுந்தருளி - மதுரை மாநகரத்தில் புகுந்தருளி, தேவார்ந்த கோலம் - தெய்வத் தன்மை பொருந்திய திருவுருவம், திகழ - விளங்க, கோ ஆகி வந்து -
|