பக்கம் எண் :

திருவாசகம்
372


இராவணன் திக்கு விஜயம் செய்தபோது கயிலை மலை தடுக்கவே சினங்கொண்டு அதனையே பெயர்த்து எடுக்க முயன்றான். இறைவன் பெருவிரலால் அழுத்த, மலையினுள் அகப்பட்டு அவன் வருந்தினான் : பின்னர்ச் சாமகானம் பாடி இறைவனை வேண்டி அருள் பெற்றான். (இராமாயணம், உத்தரகாண்டம்).

தக்கனைப் போலவே, பிரமனும் இராவணனும் சிவபெருமானை இகழ்ந்து தண்டனைக்குள்ளாயினமையால், இதுவும் திருவருள் வெற்றியாயிற்று.

இதனால், இறைவன் மறக்கருணையோடு அறக்கருணையும் உடையவன் என்பது கூறப்பட்டது.

19

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற.

பதப்பொருள் : ஏகாசம் இட்ட - மேலாடை அணிந்துள்ள, இருடிகள் போகாமல் - முனிவர்கள் அழிந்து போகாமல், ஆகாசம் காவல் என்று -ஆகாயத்தில் இறைவன் காவலாய் இருக்கின்றான் என்றும், அதற்கு அப்பாலும் காவல் என்று - ஆகாயத்துக்கு அப்பாலுள்ளவர்க்கும் அவனே காவல் என்றும், உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : இறைவனே கொடியாரைத் துன்புறுத்துவது போல நல்லாரைக் காக்கவும் செய்வான் என்பார், 'இருடிகள் போகாமல் ஆகாசம் காவல்' என்றார். இப்பாடல் பழைய பதிப்புகளில் இல்லை.

இதனால், இறைவன் நல்லோரைக் காக்க வல்லவன் என்பது கூறப்பட்டது.

20

திருச்சிற்றம்பலம்