பக்கம் எண் :

திருவாசகம்
373


15. திருத்தோணோக்கம்
(தில்லையில் அருளிச்செய்தது)

'தோணோக்கம்' மகளிர் விளையாட்டுகளுள் ஒன்று.

பிரபஞ்ச சுத்தி

உலகம் நிலையாதது என்றதை உணர்ந்து அதற்கு உள்ளீடாகிய சிவத்தைக் காணுதல்.

நாலடித்தரவு கொச்சகக்கலிப்பா

திருச்சிற்றம்பலம்

பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும் பேதைகுணம் ஆகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தாஉன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம்.

பதப்பொருள் : திகழ்தில்லை அம்பலத்தே - விளங்குகின்ற தில்லையம்பலத்தின்கண்ணே, திருநடம் செய்கூத்தா - திருநடனம் செய்கின்ற கூத்தனே, உன் சேவடி கூடும் வண்ணம் - உனது செம்மையான திருவடியை அடையும்படி, பூத்து ஆரும் - மலர்கள் பூத்து நிரம்பியிருக்கின்ற, பொய்கைப்புனல் - தடாக நீர், இதுவே எனக் கருதி - இதுதான் என்று எண்ணி, பேய்த்தேர் முகக்குறும் - கானலை முகக்கின்ற, பேதை குணம் - அறிவிலியினது குணம், ஆகாமே - எங்களுக்கு உண்டாகாமல், தீர்த்தாய் - நீக்கினவனே என்று பாடி, தோணோக்கம் - நாம் தோணோக்கம் ஆடுவோம்.

விளக்கம் : பூத்தாரும் பொய்கை திருவடியும், பேய்த்தேர் பிரபஞ்சமுமாம். 'பூத்தாரும்' என்றதால், நீர் நிரம்பிய தடாகம் என்பது விளங்குகிறது. திருநாவுக்கரசரும்,

'மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே'

என்றார். பிரபஞ்ச வாழ்க்கையை நீக்கி இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்பதாம்.

இதனால், இறைவன் திருவடி இன்பம் கூறப்பட்டது.

1