பக்கம் எண் :

திருவாசகம்
374


என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விள்வெறிந் தான்பிரமன் காண்பரிய
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித்
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ.

பதப்பொருள் : துன்று ஆர் குழலினீர் - நெருங்கிப் பொருந்திய கூந்தலையுடையீர், என்றும் - எக்காலத்தும், பிறந்து இறந்து ஆழாமே - பிறந்தும் இறந்தும் துன்பக்கடலில் அழுந்தாமல், ஆண்டுகொண்டான் - என்னை அடிமை கொண்டவனும், கன்றால் விள எறிந்தான் - கன்றைக்கொண்டு விளாங்கனியை எறிந்தவனாகிய திருமாலும், பிரமன் - பிரமனும், காண்பு அரிய - காணுதற்கு அருமையான, குன்றாத சீர் - குறையாத பெருமையையுடைய, தில்லை அம்பலவன் - தில்லை அம்பலத்தை உடையவனுமாகிய இறைவனது. குணம் பரவி - அருட்குணத்தைப் போற்றி, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக்கம் ஆடுவோம்.

விளக்கம் : இதனால், கன்றால் விள எறிந்தான் என்பது, கண்ணன் பெருமையைக் காட்டி இறைவனது பெருமையைக் காட்டியபடியாம். 'துன்றார் குழலினீர்' என்றதால், தோணோக்கம் ஆடும் பெண்கள் இளமை நலம் பெற்றோர் என்பது புலனாகிறது.

கன்றால் விளவெறிந்தது :

கண்ணன் ஆய்ப்பாடியில் நந்தகோபன் மனையில் யசோதையின் இளஞ்சிங்கமாய் வளர்ந்து வருகிறான். இதனை அறிந்த கம்சன் இருவர் இராக்கதரை ஏவிக் கண்ணனைக் கொல்லத் தூண்டினான். ஒருவன் விளாம்பழமாகவும், மற்றவன் கன்றாகவும் வந்திருந்தனர். கண்ணன் தருணம் பார்த்துக் கன்றை எடுத்து விளாம்பழத்தின்மேல் எறிந்தான். கன்றும் இறந்தது; விளாம்பழமும் வீழ்ந்து சிதைந்தது. (பாகவதம்)

இதனால், இறைவன் திருவடியைப் பரவ வேண்டும் என்பது கூறப்பட்டது.

2

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்
கருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ.

பதப்பொருள் : வேடனார் - வேடராகிய கண்ணப்பரது, சேடு அறிய - பெருமையை உலகம் அறிய, செருப்புற்ற சீரடி - அவரது செருப்பு அணிந்த சிறந்த அடியும், வாய்க்கலசம் - வாயாகிய குடமும், ஊன் அமுதம் - மாமிசமாகிய உணவும், பொருள் பற்றிச்