செய்கின்ற - ஆகமப் பொருள் பற்றிச் செய்கின்ற, பூசனைகள் போல் விளங்க - பூசைகள் போல விளங்கும்படி, விருப்புற்று - விருப்பமாய் ஏற்று, மெய் குளிர்ந்து - இறைவன் திருமேனி குளிர, அங்கு - அப்பொழுதே, அருள் பெற்று நின்ற ஆ - அவர் திருவருள் பெற்று நின்ற வரலாற்றைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக்கம் ஆடுவோம். விளக்கம் : கண்ணப்பர் செய்த பூசையாவது, செருப்பணிந்த சீரடியால் இறைவன் திருமுடியிலிருந்த நிர்மாலியத்தை நீக்கியதும், வாயாகிய கலசத்திலே நீர் கொணர்ந்து திருமஞ்சனம் செய்ததும், ஊனாகிய அமுதத்தை நிவேதனமாகப் படைத்ததும் ஆம். அதனை இறைவன் விரும்பி ஏற்றான் என்பார், 'விருப்புற்று மெய்குளிர்ந்து' என்றார். கண்ணப்பர் நாளாறினில் அருள் பெற்றாராதலின், 'அங்கருட்பெற்று நின்றவா' என்றார். 'பொருள் பற்றிச் செய்கின்ற பூசனை'யாவது சிவகோசரியார் செய்த பூசையாம். ஒன்று, பத்தி நெறி; மற்றொன்று, விதி நெறி. இரண்டும் இறைவதற்கு உகந்தனவாம். இதனால், இறைவன் அன்பினால் வழிபடுவார்க்கு அருள் புரிவான் என்பது கூறப்பட்டது. 3 கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போலஎன் நெஞ்சினுள்ளே புகுந்தருளி நற்பாற் படுத்தென்னை நாடறியத் தான்இங்ஙன் சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ. பதப்பொருள் : கல் போலும் நெஞ்சம் - வலிமையான கல்லையொத்த என் மனமானது, கசிந்து உருக - நைந்து உருக, கருணையினால் - இறைவன் தனது திருவருளால், நிற்பானைப் போல - கண் முன்னே நிற்பானைப் போலத் தோன்றி, என் நெஞ்சினுள்ளே புகுந்தருளி - என் மனத்தின்கண்ணே நுழைந்தருளி, என்னை நற்பால் படுத்து - என்னை நன்மைப் பகுதியிற்படுத்தி, நாடு அறிய - உலகம் அறியும் வண்ணம், தான் - அவன், இங்ஙன் சொற்பாலது ஆன ஆ - இவ்வாறு பலரும் பல பேசும் நிலைமையை உடைய பொருள் ஆனவாற்றைச் சொல்லி, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக்கம் ஆடுவோம். விளக்கம் : சொல்லாவது, ஒன்றுக்கும் பற்றாத எங்களையும் ஆட்கொண்டான் என்று கூறுவது. இதற்குக் கருணையே காரணமாம் என உணர்தல் வேண்டும் என்பதாம். இதனால், இறைவனது பெருங்கருணை கூறப்பட்டது. 4
|