பக்கம் எண் :

திருவாசகம்
376


நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப புணர்ந்துநின்றான்
உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.

பதப்பொருள் : தான் ஒருவனுமே - இறைவன் ஒருவனே, நிலம் - நிலமும், நீர் - நீரும், நெருப்பு - தீயும், உயிர் - வாயுவும், நீள் விசும்பு - பெரிய ஆகாயமும், நிலா - சந்திரனும், பகலோன் - சூரியனும், புலன் ஆய மைந்தனோடு - அறிவுருவாய ஆன்மாவும் என்னும், எண் வகை ஆய் - எட்டு வகைப் பொருள்களாய், புணர்ந்து நின்றான் - அவற்றோடு கலந்திருப்பவனாய், உலகு ஏழ் என - ஏழுலகங்களெனவும், திசை பத்து என - திக்குகள் பத்தெனவும், தான் பல ஆகி நின்ற ஆ - தான் பல பொருள்களாய் நின்ற வகையைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக்கம் ஆடுவோம்.

விளக்கம் : நிலம் முதலாய எட்டும் இறைவனது அஷ்ட மூர்த்தம் என்பர். திசை பத்தென்றது, எட்டுத் திசைகளோடு மண்ணையும் விண்ணையும் கூட்டி என்க. 'ஒருவனுமே பலவாகி நின்றது' இறைவனாகிய ஒருவனுமே எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருத்தலாம்.

இதனால், இறைவன் எல்லாப் பொருள்களிலும் கலந்திருக்கிறான் என்பது கூறப்பட்டது.

5

புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்
தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ.

பதப்பொருள் : புத்தன் முதல் ஆய - புத்தன் முதலான, புல் அறிவின் - சிறு அறிவினையுடைய, பல்சமயம் - பல சமயத்தவர், தத்தம் மதங்களில் - தங்கள் தங்கள் சமயங்களில், தட்டுளுப்புப் பட்டு நிற்க - தடுமாற்றமடைந்து நிற்க, சித்தம் சிவம் ஆக்கி - என் சித்தத்தைச் சிவமயமாகச் செய்து, செய்தனவே - யான் செய்த செயல்களையே, தவம் ஆக்கும் - தவமாகச் செய்த, அத்தன் கருணையினால் - எம் இறைவனது கருணையைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக்கம் ஆடுவோம்.

விளக்கம் : புத்த சமயம் முதலியன வீடுபேற்றைத் தாராவாகையால், 'புல்லறிவிற் பல் சமயம்' என்றார். அவை முப்பொருளுண்மையைத் தெளிவுபெற உணர்த்தாமையால் 'தட்டுளுப்புப்பட்டு நிற்க' என்றார். சித்தம் சிவமாதல் ஜீவகரணம் சிவகரணமாதலை. சிவம் விளங்கித் தோன்றவே செய்யும்