2. கீர்த்தித்திருவகவல் (தில்லையில் அருளிச் செய்யப்பட்டது) சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை நிலைமண்டில ஆசிரியப்பா திருச்சிற்றம்பலம் தில்லை மூதூ ராடிய திருவடி பல்லுயி ரெல்லாம் பயின்ற னாகி எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோ ருலகும் 5. துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் என்னுடை யிருளை ஏறத் துரந்தும் அடியா ருள்ளத் தன்புமீ தூரக் குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும் மன்னு மாமலை மகேந்திர மதனிற் 10. சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் கல்லா டத்துக் கலந்தினி தருளி நல்லா ளோடு நயப்புற வெய்தியும் பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும் எஞ்சா தீண்டு மின்னருள் விளைத்தும் 15. கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நற்றடம் படிந்தும் கேவேட ராகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து 20. உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும் நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமி லாரிய னாயமர்ந் தருளியும் வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும் நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
|