எவ்விடத்தும் நாம் துதித்து, தோணோக்கம் ஆடாமோ தோணோக்கம் ஆடுவோம். விளக்கம் : திருமால் கண்ணிடந்து சாத்திய வரலாறு திருச்சாழலில் கூறப்பட்டது. திருமால் பயன் கருதிக் கண்ணிடந்து சாத்திச் சக்கரம் பெற்றமையின், பயன் கருதாது கண்ணிடந்து அப்பிய கண்ணப்பரது செயலுக்கு ஒப்பாகாமை அறிக. இதனால், திருமால் சிவபூசை செய்து பயன் பெற்றார் என்பது கூறப்பட்டது. 10 காமன் உடலுயிர் காலன்பற் காய்கதிரோன் நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந் தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. பதப்பொருள் : காமன் உடல் - மன்மதனை உடலையும், காலன் உயிர் - இயமனை உயிரையும், காய்கதிரோன் பல் - சுடுகின்ற கிரணங்களையுடைய சூரியனைப் பல்லையும், நாமகள் நாசி - கலைமகளை மூக்கையும், பிரமன் சிரம் - பிரமனைத் தலையையும், எரி கரத்தை - அக்கினி தேவனைக் கைகளையும, சோமன் கலை - சந்திரனைக் கலையையும, தக்கனையும் எச்சனையும் - தக்கனையும் யாக தேவனையும், தலை - தலையையும், தூய்மைகள் செய்தஆ - பாவத்தைப் போக்கித் தூய்மை செய்த விதத்தைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக்கம் ஆடுவோம். விளக்கம் : காமன் முதலியோர்க்குத் தண்டனை அளித்தது தீமை செய்வதற்காக அன்று, நன்மை புரிவதற்காகவே என்பார். 'தூய்மைகள் செய்தவா' என்றார். காமன் முதலியோரைத் தூய்மை செய்தமையைத் தண்டிக்கப்பட்ட அவர்களது உறுப்புகளின்மேல் வைத்துக் கூறினார். வரலாறுகள் முன்னர்க் கூறப்பட்டன. இதனால், இறைவனது மறக்கருணை கூறப்பட்டது. 11 பிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. பதப்பொருள் : பிரமன் அரி என்ற - பிரமன் திருமால் என்று சொல்லப்பட்ட, இருவரும் - அவ்விருவரும், தம் பேதைமையால் - தமது அறியாமையால், யாம் பரமம் யாம் பரமம் - யாமே பரம்பொருள் யாமே பரம்பொருள், என்றவர்கள் - என்று வாது செய்தவர்களுடைய, பதைப்பு ஒடுங்க - செருக்க அடங்க, அரனார் - சிவபெருமானார், அழல் உரு ஆய் - நெருப்புருவாகி, அங்கே - அவ்விடத்தே, அளவு இறந்து - அளவு கடந்து, பரம் ஆகி நின்ற ஆ -
|