பக்கம் எண் :

திருவாசகம்
381


மேலான பொருளாகி நின்ற வரலாற்றைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக்கம் ஆடுவோம்.

விளக்கம் : பிரமனும் திருமாலும் தாங்களே பரம்பொருள் என்றது, அவர்களது அறியாமையால் என்பார், 'பேதைமையால், பரமம் யாம் பரமம் என்றவர்கள்' என்றார். அவர்கள் சிவபெருமானது அடி முடியைத் தேடிக் காண முடியாமையால் அவனைப் பரம்பொருள் என்று உணர்ந்தனர் என்பார், 'அளவிறந்து பரமாகி நின்றவா' என்றார். 'யாம்' என்றது இருபுறமும் கூட்டப்பட்டது. அரனார் அழலுருவாய் நின்றது, திருவண்ணாமலையில். பரம்பொருள் அயனும் அரியும் அல்லர் என்பதாம்.

இதனால், இறைவனது அளக்கலாகாத பெருமை கூறப்பட்டது.

12

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ.

பதப்பொருள் : ஏழைத் தொழும்பனேன் - அறிவில்லாத அடியனாகிய யான், எத்தனையோ காலம் எல்லாம் - எவ்வளவோ கால முழுதும், பரம்பரனைப் பணியாதே - மேலான கடவுளை வணங்காமல், பாழுக்கு இறைத்தேன் - வீணாகக் கழித்தேன், அங்ஙனமிருந்தும்; ஊழி முதல் - ஊழி முதல்வனும், சிந்தாத - அழியாத, நல்மணி - சிறந்த மாணிக்கம் போல்பவனுமாகிய சிவபெருமான், வந்து - எழுந்தருளி வந்து, என் பிறவித் தாழை - எனது பிறவியின் வேரை, பறித்த ஆ - பிடுங்கி எறிந்த விதத்தைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக்கம் ஆடுவோம்.

விளக்கம் : மக்கட்பிறப்பில் பிறந்ததற்குப் பயன் இறைவனை வணங்குதல் வேண்டும். அதனைச் செய்யாது காலங்கழித்தேன் என்பார், 'பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே' என்றார். தாள் என்பது எதுகை நோக்கி, 'தாழ்' என வந்தது. தாழ் என்றதற்குப் பிறவியாகிய சிறையின் தாழ் என்று கூறுவாருமுளர்.

இதனால், இறைவனை வணங்கிப் பிறப்பின் பயனை அடைதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

13

உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபடித் தோணோக்கம் ஆடாமோ.