பதப்பொருள் : உரை மாண்ட - சொற்கள் தம் ஆற்றல் அடங்குதற்குக் காரணமான, உள்ளொளி - உள்ளொளியாகிய, உத்தமன் - உத்தமனாகிய சிவபெருமான், வந்து - எழுந்தருளி வந்து, உளம் புகலும் - என் மனத்திற்புகுதலும், கரை மாண்ட - கரையற்ற, காமப் பெருங்கடலை - ஆசையாகிய பெரய கடலை, கடத்தலும் - தாண்டுதலும், இரை மாண்ட - இரையற்ற, இந்திரியப் பறவை - இந்திரியங்களாகிய பறவைகள், இரிந்து ஓட - அஞ்சி ஓட, துரை மாண்ட ஆ பாடி - நமது தன்முனைப்புக் கெட்ட விதத்தைப் பாடி, தோணோக்கம் ஆடாமோ - நாம் தோணோக்கம் ஆடுவோம். விளக்கம் : உள்ளொளி என்பது ஞானம். இந்திரியத்தைப் பறவை என்றும், இந்திரியத்தால் அனுபவிக்கப்படும் விஷயங்களை இரை என்றும் கூறினார். ஞானம் பெற்றபின் உலக வாதனை இல்லையாதலின், 'இந்திரியப்பறவை இரிந்தோட' என்றார். இந்திரியவழி நில்லாது இறைவழி நிற்றலை, 'துரை மாண்ட' என்றதால் குறிப்பிட்டார். துரை - மிகுதிப்பாடு. அது தன்முனைப்பைக் குறித்தது. சிவஞான சித்தி இரண்டாம் சூத்திரத்து முப்பத்திரண்டாம் செய்யுள் உரையில் சிவஞான சுவாமிகள் இதனை எடுத்துக் காட்டியுள்ளமை காண்க. இதனால், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டோர் உலகவாதனை நீங்குவர் என்பது கூறப்பட்டது. 14 திருச்சிற்றம்பலம்
|