16. திருப்பொன்னூசல் (தில்லையில் அருளிச்செய்தது) பொற்பலகை மாட்டப்பட்ட ஊஞ்சல் பொன்னூசலாம். ஊசலில் இருந்து ஆடுவோர் பாடும் பாட்டு, ஊசற்பாட்டாகும். ஆட்டுவோர் பாடுதலும் உண்டு. இவற்றை 'ஊசல் வரி' என வரும் சிலப்பதிகாரப் பாடல்களாலும் பிறவற்றாலும் அறியலாம். இங்கு 'ஊசல்' என்பது ஊசற்பாடலையே குறித்தது. அருட்சுத்தி உயிர் அருளால் அடைகின்ற தூய்மை; அஃதாவது, திருவருளில் தோய்ந்து பாசத்தினின்றும் நீங்குதல். ஒப்புமை பற்றி வந்த ஆறடித்தரவு கொச்சகக்லிப்பா திருச்சிற்றம்பலம் சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற் கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தா ளிணைபாடிப் போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ. பதப்பொருள் : போர் ஆர் வேல் - போருக்கு அமைந்த கூரிய வேலையொத்த, கண் - கண்களையுடைய, மடவீர் - பெண்களே, சீர் ஆர் பவளம் - மேன்மை பொருந்திய பவளம், கால் - கால்களாகவும், முத்தம் கயிறு ஆக - முத்து வடம் கயிறு ஆகவும் உடைய, ஏர் ஆரும் - அழகு பொருந்திய, பொன் பலகை ஏறி - பொன்னாலாகிய ஊஞ்சல் பலகையில் ஏறி, இனிது அமர்ந்து - இனிமையாய் இருந்து, நாராயணன் அறியா - திருமால் அறியாத, நாள் மலர் தாள் - அன்றலர்ந்த தாமரை போலும் திருவடியை, நாயடியேன் - நாய் போன்ற அடியேனுக்கு, ஊர் ஆக - உறைவிடமாக, தந்தருளும் - தந்தருளின, உத்தரகோச மங்கை - திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கிற, ஆரா அமுதின் - தெவிட்டாத அமுதம் போன்றவனது, அருள் தாள் இணைபாடி - அருளாகிய இரண்டு திருவடியைப் புகழ்ந்து பாடி, பொன்னூசல் ஆடாமோ - நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.
|