பக்கம் எண் :

திருவாசகம்
384


விளக்கம் : பவளம் கால், முத்தம் கயிறு, பொன் பலகை என்றது, ஊஞ்சலாடி விளையாடும் பெண்களின் செல்வச் சிறப்பைக் காட்டுகிறது. நாண்மலர்த்தாளை ஊராகத் தருதலாவது, இறைவன் தனது திருவடியை உயிர்கட்கு உறைவிடமாகக் கொடுத்து இன்பந்துய்க்கச் செய்தல், 'நாராயணன் அறியா' என்றதால் திருவடிச் சிறப்பு விளங்குகிறது.

இதனால், இறைவனது திருவடியைப் பாட வேண்டும் என்பது கூறப்பட்டது.

1

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்
கூன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.

பதப்பொருள் : குலமஞ்ஞை போன்று - உயர்ந்த மயிலைப் போன்ற சாயலைப் பெற்று, அனநடையீர் - அன்னத்தைப் போன்ற நடையையுடைய பெண்களே, இலங்கு - விளங்குகின்ற, மூன்று நயனத்தன் - மூன்று கண்களையுடையவனும், மூவாத - கெடாத, வான்தங்கு தேவர்களும் - விண்ணுலகில் தங்கியிருக்கும் தேவர்களும், காணா - காணாவொண்ணாத, மலர் அடிகள் - தாமரை போன்ற திருவடிகள், தேன் தங்கி - தேன் கலந்தது போன்று, தித்தித்து - இனித்து, அமுதூறி - அமுதாய் ஊற்றெடுத்து, தான் - அது, தெளிந்து - விளங்கி, ஊன் தங்கி நின்று - உடலில் பொருந்தி, உருக்கும் - உருக்குகின்ற, உத்தரகோச மங்கைக் கோன் - திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனுமாகிய இறைவன், தங்கு - எழுந்தருளியிருக்கும், இடைமருது பாடி - திருவிடைமருதூரைப் பாடி, பொன்னூசல் ஆடாமோ - நாம் பொன்னலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

விளக்கம் : தோற்றத்துக்கு மயிலையும், நடைக்கு அன்னத்தையும் பெண்களுக்கு உவமையாகக் கூறினார். அங்கு, அசைகள். 'மூவாத திருவடிகள்' என்று கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது. அது தேனாய்த் தித்தித்து அமுதாய ஊறித் தெளிவாய்த் தோன்றியதுமன்றி, ஊனினையும் உருக்கிற்று என்பார், 'ஊன்தங்கி நின்றுருக்கும்' என்றார். 'ஊனினை உருக்கி' என்று பின்னரும் கூறுவார்.

இதனால், இறைவனது ஊரைப் பாடவேண்டும் என்பது கூறப்பட்டது.

2