முன்ஈறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம் பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத் தன்னீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து மன்னூறு மன்னுமணி யுத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப் பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. பதப்பொருள் : பொன் ஏறு - பொன் பொருந்திய, பூண் முலையீர் - ஆபரணங்கள் அணிந்த தனங்களையுடைய பெண்களே, முன் - நினைக்கப்பட்ட, ஈறும் ஆதியும் இல்லான் - முடிவும் முதலும் இல்லாதவன், முனிவர் குழாம் - முனிவர் கூட்டமும், பல் நூறு கோடி இமையோர்கள் - பல நூறு கோடி விண்ணவரும், தாம் நிற்ப - தாங்கள் ஏமாறி நிற்க, தன் நீறு - தனது விபூதியை, எனக்கு அருளி - எனக்கு அளித்து, தன் கருணை வெள்ளத்து - தனது அருள் வெள்ளத்திலே, மன் ஊறு - மிகுதியாக ஆழ்ந்து கிடக்கும்படி, மன்னும் - எழுந்தருளியிருக்கின்ற, மணி உத்தரகோச மங்கை - அழகிய உத்தரகோச மங்கையின்கண் உள்ள, மின் ஏறும் மாடம் - மேகங்கள் தவழும்படியான மாடங்களையுடைய, வியன்மாளிகை பாடி - அகன்ற கோயிலைப் பாடி, பொன்னூசல் ஆடாமோ - நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம். விளக்கம் : நீறு அளிப்பது ஆட்கொள்ளுதலைக் குறிக்கும். கோயிலில் வாயிலிலும் பிற இடங்களிலும் மாடங்கள் உண்டு; அவை மிக உயரமாய் இருக்கின்றன என்பதைக் காட்ட, 'மின்னேறு மாடம்' என்றார். உத்தரகோச மங்கையிலுள்ள இறைவனது ஆலயம் மிகப் பெரியது ஆதலின், 'வியன் மாளிகை' என்றார். இதனால், இறைவனது ஆலயத்தைப் பாட வேண்டும் என்பது கூறப்பட்டது. 3 நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன் மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை அஞ்சொலாய் தன்னோடுங் கூடி அடியவர்கள் நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. பதப்பொருள் : புஞ்சம் ஆர் - தொகுதியாகப் பொருந்திய, வெள்வளையீர் - வெண்மையான வளையலை அணிந்த பெண்களே, நஞ்சு அமர் கண்டத்தன் - விடம் தங்கிய கண்டத்தையுடையவனும், அண்டத்தவர் நாதன் - தேவலோகத்தார்க்குத் தலைவனும், மஞ்சு தோய் - மேகங்கள் படிகின்ற, மாடம் - மேல் மாடங்களையுடைய, மணி - அழகிய, உத்தரகோச மங்கை - திருவுத்தரகோச
|