பக்கம் எண் :

திருவாசகம்
386


மங்கையில், அம்சொல்லாளோடும் கூடி - இனிய மொழியையுடைய உமாதேவியோடும் கூடி, அடியவர்கள் நெஞ்சுளே நின்று - அடியாரது மனத்துள்ளே நிலைத்து நின்று, அமுதம் ஊறி - அமுதம் சுரந்து, கருணை செய்து - திருவருள் புரிந்து, துஞ்சல் பிறப்பு அறுப்பான் - இறப்பு பிறப்புகளை அறுப்பவனுமாகிய இறைவனது, தூய புகழ் பாடி - தூய்மையான புகழினைப் பாடி, பொன்னூசல் ஆடாமோ - நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

விளக்கம் : 'வெள்வளை' என்பது, சங்கினாலாகிய வளை என்பதாம். 'அஞ்சொலாள் தன்னோடுங்கூடி' என்றது, உத்தர கோச மங்கையில் தமக்கு அம்மையப்பனாகக் காட்சி கொடுத்ததை மனத்துட்கொண்டு என்பதாம். 'நெஞ்சுளே அமுதமூறி' என்றது இறை அனுபவம். இறைவனது புகழே குறைவற்ற புகழ் ஆதலின், 'தூய புகழ்' என்றார்

இதனால், இறைவனது புகழைப் பாட வேண்டும் என்பது கூறப்பட்டது.

4

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பதப்பொருள் : பூண் ஆர் - ஆபரணங்கள் நிறைந்த, வனமுலையீர் - அழகிய தனங்களையுடைய பெண்களே, ஆணோ - ஆண் இனமோ, அலியோ - அலி இனமோ, அரிவையோ - பெண்ணினமோ, என்று - என்று. இருவர் காணாக் கடவுள் - அயன் மாலாகிய இருவரும் காண முடியாத கடவுளும், கருணையினால் - தன் பெருங்கருணையால், தேவர் குழாம் - தேவர் கூட்டம், நாணாமே - நாணம் அடையாமல், உய்ய - பிழைக்கும்படி, ஆட்கொண்டருளி - அடிமை கொண்டருளி, நஞ்சுதனை - பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை, ஊண் ஆக உண்டருளும் - உணவாக உண்டருளின, உத்தரகோச மங்கை - திருவுத்தரகோச மங்கையிலுள்ள, கோண் ஆர் பிறை - வளைவுள்ள பிறையையணிந்த, சென்னி - சடையையுடைய, கூத்தன் - கூத்தனுமாகிய இறைவனது, குணம் பரவி - குணத்தைத் துதித்து, பொன்னூசல் ஆடாமோ - நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

விளக்கம் : திருவண்ணாமலையில் ஆண் பெண் வடிவின்றிச் சோதியாய்த் தோன்றிக் காட்சியளித்தான் / பெருமானாதலின், 'ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள்'