பக்கம் எண் :

திருவாசகம்
399


பதப்பொருள் : நீல உருவில் குயிலே - நீல நிறத்தையுடைய குயிலே, நீள் மணி மாடம் - மணிகள் பதித்த பெரிய மாடங்கள், நிலாவும் - விளங்குவதும், சீலம் பெரிதும் இனிய - நல்லொழுக்கத்தால் மிக இனியதுமான, திருவுத்தரகோச மங்கை உள்ளுறை கோயில் - திருவுத்தரகோச மங்கையில் பொருந்தியுள்ள திருக்கோயிலில், கோல உருவில் - அழகிய வடிவில், திகழும் - விளங்கும், கொடிமங்கை - பூங்கொடி போன்ற உமாதேவியுடன், ஞாலம் விளங்க இருந்த - உலகத்திற்கு விளக்கம் உண்டாகும்படி வீற்றிருந்த, நாயகனை - தலைவனை, வரக்கூவாய் - வரும்படி கூவி அழைப்பாயாக.

விளக்கம் : திருவுத்தரகோச மங்கை ஒழுக்கம் மிக்க பெரியோர்களை உடைமையால், 'சீலம் பெரிதும் இனிய' என்றாள். அங்கு இறைவன் ஆகமப்பொருளை பெரியோர்களுக்கு உபதேசித்தமையால், 'ஞாலம் விளங்க இருந்த நாயகன்' என்றாள்.

இதனால், இறைவன் விளக்கம் தருபவன் என்பது கூறப்பட்டது.

3

தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
மான்பழித் தாண்டமென் ணோக்கி மணாளனை நீவரக் கூவாய்.

பதப்பொருள் : தேன்பழச் சோலை பயிலும் - தேன் நிறைந்த பழங்களையுடைய சோலைகளில் சஞ்சரிக்கின்ற, சிறுகுயிலே - சிறிய குயிலே, இது - இதனை, நீ கேள் - நீ கேட்பாயாக, வான் பழித்து - விண்ணுலகத்தை விட்டு நீங்கி, இம்மண் புகுந்து - இம்மண்ணுலகத்து எழுந்தருளி, மனிதரை ஆட்கொண்ட வள்ளல் - மக்களை அடிமை கொண்ட அருளாளனும், ஊன் பழித்து - என் உடம்பினை இகழ்ந்து, உள்ளம் புகுந்து - என் நெஞ்சினுள் புகுந்து, என் உணர்வது ஆய ஒருத்தன் - என் உணர்வில் கலந்த ஓப்பற்றவனும், மான் பழித்து - மானினது பார்வையை இகழ்வதாயும், ஆண்ட - ஆளும் தன்மையுடையதாயும், மெல் நோக்கி - இனிமையுடைதாயுமுள்ள பார்வையையுடைய உமாதேவிக்கு, மணாளனை - நாயகனுமாகிய இறைவனை, வர நீ கூவாய் - வரும்படியாக நீ கூவி அழைப்பாயாக.

விளக்கம் : அருளை வாரி வழங்குபவனாதலின், 'வள்ளல்' என்றும், அவ்வண்ணம் ஆட்கொள்வார் வேறொருவர் இல்லையாதலின், 'ஒருத்தன்' என்றும், தேவியோடு தோன்றியே ஆட்கொள்வானாதலின், 'மணாளன்' என்றும் பெருமானது இயல்பினை வரிசைப்படுத்திக் கூறினாள்.