இப்பாடல்களில் ஒவ்வொர் அடியிலும் உள்ள சீர்கள் இருவகை வெண்டளையும் பெற்று வருவன. ஆதலின், 'சொல்லிறந்துந் நின்ற' என்று கொள்ளப்பட்டது. நகரவொற்று விரித்தல். இதனால், இறைவன் பெருமை கூறப்பட்டது. 1 ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன னுருவாய் ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப் பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குறிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். பதப்பொருள் : குயிலே - குயிலே, ஏர் தரும் - அழகுடன் விளங்கும், ஏழுலகு ஏத்த - ஏழுலகத்தாரும் துதிக்க, எவ்வுருவும் - எவ்வகை உருவங்களும், தன் உரு ஆய் - தன் உருவமாகவே உடையவனாய், ஆர்கலி சூழ் - நிறைந்த முழக்கமுடைய கடல் சூழ்ந்த, தென்னிலங்கை - தென்னிலங்கையில், அழகு அமர் வண்டோதரிக்கு - அழகு பொருந்திய இராவணன் மனைவியாகிய வண்டோதரிக்கு, பேரருள் - பெருங்கருணையால், இன்பம் அளித்த - இன்பத்தைக் கொடுத்த, பெருந்துறை மேய பிரானை - திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பெருமானை, தென்பாண்டி நாடனை - தென்பாண்டி நாட்டையுடையவனை, சீரிய வாயால் கூவாய் - சிறந்த உன் வாயினால் கூவி அழைப்பாயாக. விளக்கம் : இறைவனை ஒருவனே எல்லாவுலகமுமாய்க் கலந்து நிற்கின்றான் ஆதலின், 'எவ்வுரு வுந்தன் னுருவாய்' என்றாள். குயிலுக்கு வாய் சிறப்புடைமையின், 'சீரிய வாயாற் குயிலே' எனப் புகழ்ந்தாள். வண்டோதரிக்கு இன்பம அளித்தது : முன்னொரு நாள் திருவுத்தரகோச மங்கையில் பெருமான் இலந்தை மரத்தடியில் முனிவர்களுக்கு ஆகமப் பொருளை அருளிக்கொண்டிருந்தான். அப்போது இலங்கை மன்னனது மனைவி வண்டோதரி வேண்ட, அவளது பூசைக்கு இரங்கிப் பெருமான் முனிவர்களையும் விடுத்து, அவளுக்குக் குழந்தை வடிவத்தில் காட்சியளித்தான். சிவபூசையில் சிறந்தவனாகிய இராவணனும் குழந்தை வடிவத்தில் கிடந்த பெருமானைத் தூக்கி எடுத்து உச்சி மோந்து பேரானந்தம் கொண்டான். இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது. 2 நீல வுருவிற் குறிலே நீள்மணி மாடம் நிலாவுங் கோல உருவில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில் சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய்.
|