பக்கம் எண் :

திருவாசகம்
397


18. குயிற்பத்து
(தில்லையில் அருளிச்செய்தது)

குயிலை முன்னிலைப்படுத்திக் கூறும் பத்துப் பாடல்கள் அடங்கிய பகுதி குயிற்பத்து. தலைவி, தலைவன் பிரிந்த பிரிவினை ஆற்றாமையினால், குயிலைப் பார்த்துச் சொல்வதாக அமைந்துள்ளது இப்பகுதி.

ஆத்துமவிரக்கம்

ஆன்மா இறைவனை அடைய விரும்பி இரங்குதல்.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந் துந்நின்ற தொன்மை
ஆதி குணம்ஒன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய்.

பதப்பொருள் : கீதம் இனிய குயிலே - இசை இனிமையாய் உள்ள குயிலே, எங்கள் பெருமான் - எம்பெருமானது, பாதம் இரண்டு வினவில் - திருவடி இரண்டும் எஙகுள்ளனவெனக் கேட்டால், பாதாளம் ஏழினுக்கு அப்பால் - அவை கீழுலகம் ஏழினுக்கும் அப்பால் உள்ளன என்க, சோதி மணிமுடி சொல்லில் - அவனது ஒளி பொருந்திய அழகிய திருமுடி எங்குள்ளது என்று சொல்லப்புகின், சொல் இறந்து நின்ற தொன்மை - அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற பழமையுடையது எனப்படும், கேட்டியேல் - இவற்றைக் கேட்டாயாயின், ஆதி குணம் ஒன்றும் இல்லான் - முதலும் குணமும் ஒன்றும் இல்லாதவனும், அந்தம் இலான் - முடிவு இல்லாதவனுமாகிய அவனை, வரக் கூவாய் - நீ இங்கு வரும்படி கூலி அழைப்பாயாக.

விளக்கம்: குயிலை, 'நீ இறைவனை அழைத்தற்குத் தகுதியுடையாய்' என்பாள், 'கீதம் இனிய குயிலே' என விளித்தாள். 'வினவில்', 'சொல்லில்' என்றாற்போல வரும் 'செயின்' என்னும் வாய்பாட்டு எச்சங்கள் சொல்லெச்சமாக யாதேனும் ஒரு சொல் வருவித்து முடிக்கப்படுதல் அறிக, 'அப்பால்' என்பதிலும், 'உள்ளன' என்பது சொல்லெச்சமாய் நின்றது. 'தொன்மை' என்பது, தொன்மையுடையது' எனப் பொருள் தந்தது ஆகுபெயர். எனவே, மணிமுடி' என்பதற்கு 'நின்றது' என்பதே முடிபாயிற்று.