ஏற்பார், என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள்; மேலும், அன்னே - தாயே, அவர் ஐயம் புகுந்து போதலும் - அவர் பிச்சை எடுத்துத் தெருவில் போகும் போது, என் உள்ளம் நையும் - என் மனம் வருந்தும், இது என்னே - இது என்ன காரணம், என்னும் - என்று சொல்லுவாள். விளக்கம் : இது தையலோர் பங்கும் தாபத வேடமும் ஆகிய முரண்பட்ட வேடங்களை ஒருவனே மேற்கொள்ளுதலைக் காட்டுகிறது. ஐயம் புகுந்தவர் போகின்றதைக் கண்டு உள்ளம் நைதலும் இயல்புக்கு மாறாக உள்ளதே என்பாள், 'என் உள்ளம் நையுமிது என்னே' என்றாள். ஐயம் புகுதல், ஆன்ம போதத்தை ஏற்கவேயாம். உள்ளம் நைதல். தற்போதம் கெட்ட பின் உண்டாகும் மனநெகிழ்ச்சி. இதனால், இறைவன் அடியார்களது ஆன்மபோதத்தை ஏற்றருளுவான் என்பது கூறப்பட்டது. 9 கொன்றை மதியமுங் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே இன்றெனக் கானவா றன்னே என்னும். பதப்பொருள் : அன்னே - தாயே, கொன்றை மதியமும் - (எண்ணாற்காணப்பட்டவர்) கொன்றை மலரோடு பிறையும், கூவிள மத்தமும் - வில்வத்தோடு ஊமத்தமும், துன்றிய - பொருந்திய, சென்னியர் - சடையையுடையவர், என்னும் - என்று நின் மகள் சொல்லுவாள்; மேலும், அன்னே - தாயே, சென்னியில் துன்றிய - சடையில் பொருந்திய, மத்தம் - ஊமத்த மலர், இன்று எனக்கு - இப்பொழுது எனக்கு, உன்மத்தம் ஆனவாறு - பெரும்பித்தை உண்டுபண்ணினவாறு, என்னே - என்ன காரணம், என்னும் - என்று சொல்லுவாள். விளக்கம் : இறைவன் சடையில் அணிந்துள்ளது ஊமத்தமலர். அது மிகவும் தாழ்ந்தது; எனினும், எனக்கு மால் செய்ததே என்பாள், 'துன்றிய சென்னியின் மத்தம் இன்றெனக்கு உன்மத்தமானவாறு என்னே' என்றாள். பொருளின் மதிப்பு, பொருளின் தன்மையை மட்டும் பொறுத்தது அன்று, அதை விரும்புவார் மனத்தையும் பொறுத்தது, ஆதலின், தலைவன்மேல் உள்ள விருப்பம் அவன் அணிந்திருக்கும் ஊமத்த மலரும் மால் கொள்ளச் செய்தது என்பதாம். இதனால், இறைவன் அடியார்களைப் பித்தராக்குவான் என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|