பக்கம் எண் :

திருவாசகம்
401


அளித்து - இனிய -அமுதத்தைப் பெய்து, ஊறும் ஆனந்தன் - அடியார் உள்ளத்தை ஊறுகின்ற ஆனந்த வடிவானவனும், வான் வந்த தேவன் - விண்ணினின்றும் எழுந்தருளின தேவனும், நல்பொன் மணிச் சுவடு ஒத்த - உயர்ந்த பொன்னில் மாணிக்கங்களைப் பதித்தது போன்ற, நல் பரிமேல் வருவானை - நல்ல குதிரையின்மீது வந்தவனும், கோகழிநாதனை - திருப்பெருந்துறைத் தலைவனுமாகிய பெருமானை, கூவாய் - கூவி அழைப்பாயாக.

விளக்கம்: குயிலுக்கு இன்பம் செய்தலாவது, பழம் முதலியவற்றைத் தருதல். சித்தத்தே தித்திக்கும் தேனாதலின், 'அமுதளித்து ஊறும் ஆனந்தன்' என்றாள். 'பொன் மணிச்சுவடு ஒத்த நற்பரி' என்பது, பொன்னிறத்தில் சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரை என்பதாம்.

இதனால், இறைவன் ஆனந்த வடிவாய் இருப்பான் என்பது கூறப்பட்டது.

6

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்தநன் மேனிப் புகழின் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கள்வரக் கூவாய்.

பதப்பொருள்: குயிலே - குயிலே, உன்னை உகப்பன் - உன்னை விரும்புவேன், உன் துணைத் தோழியும் ஆவன் - உனக்குத் துணை புரியும் தோழியுமாவேன், பொன்னை அழித்த - பொன்னை வென்ற, நல் மேனி - அழகிய திருமேனியையுடைய, புகழின் திகழும் - புகழினால் விளங்குகின்ற, அழகன் - அழகனும், மன்னன் - (யாவர்க்கும்) அரசனும், பரிமிசை வந்த வள்ளல் - குதிரைமேல் ஏறிவந்த அருளாளனும், பெருந்துறை மேய திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள, தென்னவன் - பாண்டியனும், சேரலன் - சேரனும், சோழன் - சோழனும், சீர்ப்புயங்கன் - சிறந்த பாம்பு அணிகளையுடையவனுமாகிய பெருமானை, வரக் கூவாய் - வரும்படியாகக் கூவி அழைப்பாயாக.

விளக்கம்: 'உன்னை உகப்பன் உன்துணைத் தோழியும் ஆவன்' என்றது, தலைவியின் ஆற்றாமையைக் காட்டியபடி. காண்பதற்கு இனிமையானது அழகு; கேட்பதற்கு இனிமையானது புகழ்; இரண்டையும் உடையவன் பெருமானாதலின், 'புகழின் திகழும் அழகன்' என்றாள். 'தென்னவன் சேரலன் சோழன்' என்றது மூவேந்தருமாய் இருந்து உலகத்தை ஆள்பவன் என்பதாம்.

இதனால், இறைவன் உலகத்தை ஆள்பவன் என்பது கூறப்பட்டது.

7