பக்கம் எண் :

திருவாசகம்
402


வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவி யவருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி
மேவியன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய்.

பதப்பொருள்: குயில் பிள்ளாய் - இளங்குயிலே, நீ இங்கே வா - நீ இவ்விடத்து வருவாயாக, மாலொடு - திருமாலோடு, நான்முகன் பிரமனும், தேடி - அடிமுடிகளைத் தேடி, ஓவி - தேடுவதை விட்டு, அவர் - அவ்விருவரும், உன்னி நிற்ப - தன்னைத் தியானித்து நிற்கும்படி அன்று - அக்காலத்தில், ஓள் தழல் - ஒளி மி்க்க அனற்பிழம்பாய், விண் பிளந்து ஓங்கி - ஆகாயத்தைப் பிளந்து உயர்ந்து, மேவி - பொருந்தி, அண்டம் கடந்து - விண்ணுலகங்களையும் தாண்டி, விரி சுடர் - பரந்த சுடர்களை விட்டுக்கொண்டு, நின்ற மெய்யன் - நின்ற உண்மைப் பொருளானவனும், தாவி வரும் - தாவி வருகின்ற, பரிப்பாகன் - குதிரைப் பாகனாயிருப்பவனும், தாழ்சடையோன் - நீண்ட சடையையுடையவனுமாகிய தலைவனை, வரக் கூவாய் - வரும் படியாகக் கூவி அழைப்பாயாக.

விளக்கம்: ஒள் தழலாகப் பெருமான் தோன்றிய இடம் திருவண்ணாமலை என்பது முன்னே கூறப்பட்டது. சுடர் என்றது தழலினின்றும தோன்றுவது ஆதலின், தழலாய் ஓங்கிச் சுடராய் நின்றான் என்றாள். 'சுடர் விட்டுளன் எங்கள் சோதி' என்றார் திருஞானசம்பந்தரும்.

இதனால், இறைவன் திருமேனி அனற்பிழம்பானது என்பது கூறப்பட்டது.

8

காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச் செங்கம லத்தின் திகழுரு வாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய்.

பதப்பொருள்: கார் உடை - கரிய நிறத்தோடு, பொன் திகழ் மேனி - பொன்னைப் போன்று ஒளி விளங்கும் உடம்பையுடைய, கடிபொழில் வாழும் - மணம் நிறைந்த சோலையில் வாழ்கின்ற, குயிலே - குயிலே, சீர் உடை - சிறப்பினையுடைய, செங்கமலத்தின் - செந்தாமரை போல, திகழ் - விளங்குகின்ற, உரு ஆகிய செல்வன் - திருமேனியையுடைய செல்வனும், பாரிடை - நிலவுலகத்தில், பாதங்கள் காட்டி - திருவடிகளைக் காட்டி, பாசம் அறுத்து - பற்றுகளை ஒழித்து, எனை ஆண்ட - என்னை ஆண்டருளின, ஆர் உடை - ஆத்தி மாலையையுடைய, அம்பொனின் மேனி - அழகிய பொன் போலும் மேனியையுடைய, அமுதினை - அமுதம் போல்பவனுமாகிய பெருமானை, வர நீ கூவாய் - வரும்படியாக நீ கூவி அழைப்பாயாக.