பக்கம் எண் :

திருவாசகம்
403


விளக்கம்: பொன் திகழ் மேனி என்றது, பொன் போலும் அழகுடையது என்ற பொருளில் வந்தது. செல்வன் என்றது அருட்செல்வத்தையுடையவன் என்றபடி. பாசம் அறுத்து ஆண்டது திருப்பெருந்துறையில் என்க. ஆத்தி மாலை பெருமானுடைய அடையாள மாலை.

இதனால், இறைவன் அருளாகிய செல்வத்தையுடையவன் என்பது கூறப்பட்டது.

9

கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண ணாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தம ராமிவ னென்றிங் கென்னையும் ஆட்கொண் டருளும்
செந்தழல் போல்திரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய்.

பதப்பொருள்: கொந்து அணவும் - பூங்கொத்துகள் நெருங்கிய, பொழில் சோலை - பெரிதாகிய சோலையில், கூங்குயிலே - கூவுகின்ற குயிலே, நீ இது கேள் - நீ இதனைக் கேட்பாயாக, இங்கே அந்தணன் ஆகி வந்து - இவ்வுலகில் வேதியனாகி வந்து, அழகிய சேவடி காட்டி - அழகிய செம்மையாகிய திருவடியைக் காட்டி, எம் தமராம் இவன் என்று - எம் அன்பரில் ஒருவனாம் இவன் என்று, இங்கு - இவ்விடத்தில், என்னையும் ஆட்கொண்டருளும் - என்னையும் அடிமை கொண்டருளின, செந்தழல் போல் திருமேனி - சிவந்த தீப் போலும் திருமேனியையுடைய, தேவர் பிரான் - தேவர் பெருமான், வரக் கூவாய் - வரும்படியாகக் கூவி அழைப்பாயாக.

விளக்கம்: பொழில் - பெரிய சோலை. ஆம் பொருள், போம் பொருள் என்பன போல, 'கூம் குயில்' என வந்தது. 'எம்' என்றது, இறைவனைப் பன்மையாகக் கூறியதாம். தழல் துய்மை செய்யும் இயல்பையுடையது ஆதலின், மாசு நீக்கம் விரும்புவாள், 'செந்தழல் போல் திருமேனித் தேவர் பிரான்' என்றாள்.

இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது.

10

திருச்சிற்றம்பலம்