பக்கம் எண் :

திருவாசகம்
404


19. திருத்தசாங்கம்

இது தில்லையில் அருளிச்செய்தது.

அரசனுக்குரிய பத்து உறுப்புகளும் இறைவனிடத்தில் காணப்படும் முறை கூறப்பட்டுள்ளது. தசாங்கங்கள் கீர்த்தித் திருவகவலில் கூறப்பட்டன. இவையனைத்தும் தலைவி கிளியைப் பார்த்துக் கூறப்பட்டனவாகவே சொல்லப்பட்டுள்ளன. இறைவனது தசாங்கங்களையும் தலைவி கிளியின் வாயால் கேட்டு இன்புறுகின்றாள் என்க.

அடிமை கொண்ட முறைமை

இறைவன் அடிகளை ஆட்கொண்ட முறை.

நேரிசை வெண்பா

திருச்சிற்றம்பலம்

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.

பதப்பொருள்: ஏர் ஆர் - அழகு பொருந்திய, இளங்கிளியே - இளமையான கிளியே, எங்கள் பெருந்துறைக்கோன் - எம்முடைய திருப்பெருந்துறை மன்னனது, சீர் ஆர் - சிறப்புப் பொருந்திய, திருநாமம் - திருநாமத்தை, வெண்மலரான் - தூய தாமரை மலர் மேலிருக்கும் பிரமன், பாற்கடலான் - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால், செப்புவ போல் - சொல்வது போல, ஆரூரன் - திரு ஆரூரன், செம்பெருமான் - சிவந்த திருமேனியையுடையவன், எம்பெருமான் - எம்பிரான், தேவர் பிரான் - தேவர் பெருமான், என்று - என்று, தேர்ந்து உரையாய் - ஆராய்ந்து சொல்வாயாக.

விளக்கம்: 'எங்கள் பெருந்துறைக்கோன்' என்றது உரிமை பற்றி என்க. சென்ற திருப்பதிகத்தில் இறுதிப்பாட்டில் 'எந்தமராம் இவன்' என்ற பெருமான் வாக்கையும் காண்க. 'ஆரூரன், செம்பெருமான், எம்பெருமான், தேவர் பிரான்' என்ற திருநாமங்களில் தேவர் பிரான் என்பது முதன்மைத் திருநாமம். பாற்கடலில் தேவர்களை அழிக்க வந்த நஞ்சைத் தான் உண்டு அவர்களைக் காப்பாற்றினமையின் தேவர் பிரான் ஆயினான். "ஆதிமூர்த்திகட்கருள் புரிந்தருளிய தேவ தேவன் திருப்பெயராகவும்" என்று கீர்த்தித் திருவகவலில் வருதல் காண்க. 'வெண்மலரான்' என்பதில் வெண்மை, தூய்மையைக் குறித்தது என்க.