இதனால், இறைவனது நாமம் கூறப்பட்டது. 1 ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும் நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க் கன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றுந் தென்பாண்டி நாடே தெளி. பதப்பொருள்: ஏதம் இலா - குற்றமில்லாத, இன்சொல் - இனிய சொல்லையுடைய, மரகதமே - மரகதம் போன்ற பச்சைக் கிளியே, காதலவர்க்கு - தன்மீது அன்புள்ளவர்க்கு, அன்பு ஆண்டு - அன்பினால் ஆட்கொண்டு, மீளா அருள் புரிவான் நாடு - பிறவிக்கு மீண்டு வாராதபடி அருள் செய்வோனாகிய பெருமானது நாடாவது, என்றும் - எப்பொழுதும், தென்பாண்டி நாடே - தென்பாண்டி நாடேயாம். தெளி - இதனை நீ அறிவாயாக; அறிந்து, ஏழ்பொழிற்கும் நாதன் - ஏழுலகுக்குந் தலைவனும், நமை ஆளுடையான் - நம்மை அடிமையாகவுடையவனுமாகிய அவனது, நாடு உரையாய் - நாட்டைச் சொல்வாயாக. விளக்கம்: மரகதம், பச்சைமணி; அஃது உருவகமாய்க் கிளியை உணர்த்திற்று. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின் பிறவி இல்லையாதலின், 'மீளா அருள் புரிவான்' என்றாள். 'மீண்டுவாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதியாகவும்' என்று கீர்த்தித் திருவகவலில் வரும் வாக்கையும் ஒப்பிட்டுக்கொள்க. அவன் சோமசுந்தர பாண்டியனாயிருந்து அரசு செய்த நாடு பாண்டி நாடு என்பதனையும் உணர்க. இதனால், இறைவனது நாடு கூறப்பட்டது. 2 தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தன் வாழ்பதியென் - கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர். பதப்பொருள்: தாது ஆடு - மகரந்தம் பொருந்திய, பூஞ்சோலை - பூக்களையுடைய சோலையிலுள்ள, தத்தாய் - கிளியே, நமை ஆளும் - நம்மை ஆண்டருள்கின்ற, மாது ஆடும் பாகத்தன் - உமாதேவி அமர்ந்த பாகத்தையுடையவன், வாழ்பதி - வாழ்கின்ற ஊர், பார்மேல் - பூமியின்மேல், பத்தர் எல்லாம் - பத்தரெல்லோரும், கோதாட்டி - சீராட்டி, சிவபுரம் போல் கொண்டாடும் - சிவநகர் போலப் புகழ்ந்து போற்றும், உத்தரகோசமங்கை ஊர் என் - திருவுத்தரகோச மங்கையாகிய ஊர் என்று சொல்வாயாக.
|