பக்கம் எண் :

திருவாசகம்
406


விளக்கம்: தத்திப் பேசுவதால் கிளி தத்தை எனப்பட்டது. உத்தரகோச மங்கையிலிருந்து பத்தி செய்கின்ற அடியார்களுக்கு அருள் புரிந்து மேலான பதவிகளில் சேர்ப்பவனாதலின், சிவனைப் 'பத்தரெல்லாம் பார்மேல் சிவபுரம் போல் கொண்டாடும்' என்றாள். 'பத்திசெய்யடியாரைப் பரம்பரத் துய்ப்பவன் உத்தரகோச மங்கையூராகவும்' (கீர்த்தித்திருவகவல்) என்ற வாக்கையும் ஒப்பிட்டுக்கொள்க.

இதனால். இறைவனது ஊர் கூறப்பட்டது.

3

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு.

பதப்பொருள்: செய்யவாய் - சிவந்த வாயினையும், பைஞ்சிறகின் - பசுமையான சிறகினையும் உடைய, செல்வீ - செல்வியே, தையலாய் - பெண்ணே, வான் வந்த சிந்தை - மேன்மை பொருந்திய சிந்தையிலேயுள்ள, மலம் கழுவ - குற்றங்களைப் போக்க, வந்து இழியும் - வந்து இறங்குகின்ற, ஆனந்தம் - ஆனந்தமே, உடையான் ஆறு - எம்மை ஆளாகவுடையவனது ஆறாகும், சிந்தை சேர் - நமது சிந்தையைச் சேர்ந்த, ஐயன் - தந்தையாகிய, பெருந்துறையான் - திருப்பெருந்துறையையுடைய அவனது, ஆறு உரையாய் - அந்த ஆற்றினை உரைப்பாயாக.

விளக்கம்: கிளி அஃறிணையேயாயினும், அதனை உயர்த்திக் கூறுதற்பொருட்டு, 'செல்வீ' என்றும், 'தையலாய்' என்றும் விளித்தாள். இவற்றால், கிளி, பெண் கிளி என்பதும் அறியப்படுகின்றது. 'தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான்' (திருச்சாழல்) என்றதால், ஆனந்த வெள்ளம் என்பது தெரிகிறது. ஆற்று வெள்ளம் போலாது, இவ்வானந்த வெள்ளம் மனக்குற்றங்களைப் போக்குமாதலின், 'சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காணுடையான் ஆ.று' என்றாள். 'ஊனந் தன்னை ஒருங்குடனறுக்கும் ஆனந்தம்மே ஆறா அருளியும்' (கீர்த்தித்திருவகவல்) என்ற வாக்கையும் ஒப்பிட்டுக்கொள்க.

இதனால், இறைவனது ஆறு கூறப்பட்டது.

4

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்
திருளகல வாள்வீசி இன்பமரு முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.