விளக்கம் : கோழி என்பது சேவலைக் குறித்தது. குருகுகள் என்பதைக் காலையில் ஒலிக்கும் பிற பறவைகளுக்குக் கொள்க. உள்ளத்திலே தோன்றாது மறைந்திருக்கும் பெருமானை வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்று வேண்டுவார், 'தாளிணை காட்டாய்' என்றார். திரோதான சுத்தி என்ற பதிகக் கருத்துக்கு ஒத்திருத்தலைக் காண்க. இதனால், உள்ளத்தில் மறைந்திருக்கும் இறைவனது திருவருள் வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்பது கூறப்பட்டது. 3 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினார் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பதப்பொருள் : திருப்பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே, என்னையும் - அடியேனையும், ஆண்டுகொண்டு - அடிமை கொண்டு, இன் அருள் புரியும் - இனிய அருளைச் செய்கின்ற, எப்பெருமான் - எம் தலைவனே, இன் இசை - இனிய ஓசையையுடைய, வீணையர் யாழினர் - வீணையையுடையவரும் யாழினையுடையவரும், ஒருபால் - ஒரு பக்கத்தில் (உள்ளார்), இருக்கொடு தோத்திரம் இயம்பினர் - வேதங்களோடு தோத்திரங்களைச் சொல்லுவோர், ஒருபால் - ஒரு பக்கத்தில் (உள்ளார்), துன்னிய - நெருங்கிய, பிணைமலர் - தொடுக்கப்பட்ட மலர்களாகிய மாலைகளை ஏந்திய, கையினர் - கையையுடையவர், ஒருபால் - ஒரு பக்கத்தில் (உள்ளார்), தொழுகையர் - வணங்குதலையுடையவரும், அழுகையர் - அழுகையையுடையவரும், துவள்கையர் - துவளுதலையுடையவரும், ஒருபால் - ஒரு பக்கத்தில் (உள்ளார்), சென்னியில் - தலையின்மீது, அஞ்சலி கூப்பினர் ஒருபால் - இருகைகளையும் குவித்துக் கும்பிடுபவர் ஒரு பக்கத்தில் (உள்ளார்), அவர்களுக்கொல்லாம் அருள் புரிய, பள்ளி எழுந்தருளாய் - பள்ளி எழுந்தருள்வாயாக. விளக்கம் : இசைவாணர் ஒரு புறம் இசைத்தலோடு, வழிபடுவோர் மற்றொரு புறம் மந்திரமும் தோத்திரமும் ஓதினர் என்பார், 'இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்' என்றார். 'சுருதங்களால்
|