பக்கம் எண் :

திருவாசகம்
412


- இசை பாடுகின்றன, இவை ஓர் - இவற்றைத் திருவுள்ளம் பற்றுக, பள்ளி எழுந்தருளாய் - பள்ளியெழுந்தருள்வாயாக.

விளக்கம் : 'அண்ணல்' என்பது அருளுடையவன் என்னும் குறிப்புடையது. நிலை கலங்காது இருத்தலால், 'மலை' என்றும், குறைவிலா நிறைவாய் இருத்தலால், 'கடல்' என்றும் இறைவனை விளித்தார்.
எட்டுத்திக்குப் பாலகர்களில் இந்திரன் கிழக்குத் திக்கிற்குரியவன். 'அருணன் இந்திரன் திசை அணுகினன்' என்பது, கிழக்கே செவ்வானம் தோன்றிற்று என்பதாம். சூரியோதயத்துக்கு முன்னே உண்டர்வது அருணோதயம்.

சூரியன் எழுதலும், தாமரை மலர்தலும், வண்டு முரலுதலும் காலையை அறிவிக்கும் நிகழ்ச்சிகள். சூரியனுக்கு இறைவனது கருணையை உவமை கூறியது, ஒளியை வீசி இருளைப் போக்கும் தொழில்பற்றியாம். தாமரை மலருக்குக் கண்ணை உவமை கூறியது அழகு பற்றி என்க.

இதனால், இறைவன் அருள் வடிவாகவும், ஆனந்த வடிவாகவும் உள்ளவன் என்பது கூறப்பட்டது.

2

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பதப்பொருள் : தேவ - தேவனே, திருப்பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே, யாவரும் அறிவு அரியாய் - யாவராலும் அறிதற்கு அரியவனே, எமக்கு எளியாய் - எங்களுக்கு எளியவனே, எம் பெருமான் - எம் தலைவனே, பூங்குயில் கூவின - அழகிய குயில்கள் கூவின, கோழி கூவின - கோழிகள் கூவின, குருகுகள் இயம்பின - பறவைகள் ஒலித்தன, சங்கம் இயம்பின - சங்குகள் முழங்கின, தாரகை ஒளி ஓவின - நட்சத்திரங்களின் ஒளி மழுங்கின, உதயத்து ஒளி ஒருப்படுகின்றது - உதயகாலத்து வெளிச்சம் தோன்றுகிறது, நமக்கு - எமக்கு, விருப்பொடு - அன்புடன், நல் - சிறந்த, செறிகழ - நெருங்கிய வீரக்கழலையணிந்த, தாள் இணை காட்டாய் - திருவடிகள் இரண்டனையும் காட்டுவாயாக, பள்ளி எழுந்தருளாய் - பள்ளியெழுந்தருள்வாயாக.