விளக்கம் : 'முந்திய முதல்' என்றது, பிரமன் முதலிய காரணக் கடவுளர்க்கும் முற்பட்ட முதல் என்ற பொருளில் நின்றது. 'நடு இறுதி' என்றது ஏனைய காலங்களைக் காட்டிற்று. 'பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரன்' என்றதால், இறைவனது எளிவந்த கருணையைக் கூறியபடியாம். 'இங்கு நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி' என்ற திருவெம்பாவை வாக்கையும் ஒப்பிட்டுக்கொள்க. இதனால், இறைவனது கருணை கூறப்பட்டது. 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன் தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பதப்பொருள் : விண்ணகத் தேவரும் - விண்ணில் வாழும் தேவர்களும், நண்ணவும் மாட்டா - அணுகவும் முடியாத, விழுப் பொருளே - மேலான பொருளாயுள்ளவனே, உன் - உன்னுடைய, தொழும்பு அடியோங்கள் - தொண்டைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை, மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே - மண்ணுலகில் எழுந்தருளி வந்து வாழச் செய்தவனே, வண்திருப்பெருந்துறையாய் - வளப்பம் பொருந்திய திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே, வழியடியோம் - பரம்பரை அடியாராகிய எங்களுடைய, கண்ணகத்தே நின்று - கண்ணில் நின்று, களி தரு தேனே - களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே, கடல் அமுதே - பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே, கரும்பே - கரும்பு போன்றவனே, விரும்பு அடியார் - அன்பு செய்கின்ற அடியவரது, எண்ணகத்தாய் - எண்ணத்தில் இருப்பவனே, உலகுக்கு உயிர் ஆனாய் - உலகமனைத்துக்கும் உயிரானவனே, எம்பெருமான் - எம்பெருமானே, பள்ளி எழுந்தருளாய் - பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. விளக்கம் : விண்ணுலகை விட்டு மண்ணுலகுக்கு வந்து மனிதரை ஆட்கொள்ளும் வள்ளலாதலின், 'மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே' என்றார். 'வான் பழித்து மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்' என்ற அடியையும் ஒப்பு நோக்குக. அடியார்களுக்குக் கண்ணுக்கினிய காட்சியை நல்கி இன்பத்தைத் தருவான் என்பார், 'கண்ணகத்தே நின்று களிதரு தேனே' என்றார். கண்ணிலே தோன்றி இன்பத்தைத் தருதலோடு, எண்ணத்திலும் விளங்கி நன்மையும் செய்வான் என்பார், 'எண்ணகத்தாய்' என்றார்.
|