இறைவனது இயக்கமின்றி உலகம் இயங்காதாகலின், 'உலகுக்குயிரானாய்' என்றார். இதனால், இறைவன் உயிர்களுக்குப் பேரின்பம் நல்குவான் என்பது கூறப்பட்டது. 9 புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. பதப்பொருள் : திருப்பெருந்துறையுறைவாய் - திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே, திருமால் ஆம் அவன் - திருமாலாகிய அவன், புவனியில் - பூமியில், போய்ப் பிறவாமையின் - சென்று பிறவாமையினால், நாம் - யாம், அவமே - வீணாகவே, நாள் போக்குகின்றோம் - நாளைக் கழிக்கின்றோம், இந்தப் பூமி - இந்தப் பூமியானது, சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி - சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்ளகின்ற இடமென்று பார்த்து, விருப்பு எய்தவும் - விருப்பத்தை அடையவும், மலரவன் - பிரமன், ஆசைப்படவும் - இச்சிக்கவும், நின் - உனது, அலர்ந்த - பரந்த, மெய்க்கருணையும் - உண்மையான திருவருட்சத்தியும், நீயும் - நீயுமாக, அவனியில் புகுந்து - பூமியில் எழுந்தருளி வந்து, எமை ஆட்கொள்ள வல்லாய் - எங்களை ஆட்கொள்ள வல்லவனே, ஆர் அமுதே - அருமையான அமுதம் போன்றவனே, பள்ளி எழுந்தருள் - திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. விளக்கம் : இறைவனை வழிபடத்தக்க இடம் இப்பூமி என்றும், இங்கு வந்து வழிபடாத நாள் பிறவாத நாள் என்றும் உணர வேண்டும் என்பதாம். இப்பூமியின் பெருமையை 'வானிடத்தவரும் மண்மேல் வந்தரன்றனை அர்ச்சிப்பர்' என்ற சிவஞான சித்தியைக் காண்க. மறைப்புச் சத்தியே அருள வரும்போது அருட்சத்தியாக மாறுகின்றது என்பது, 'அலர்ந்த மெய்க்கருணை' என்பதனால் விளங்குகிறது. இஃது அஞ்செழுத்தில் வகரத்தால் குறிக்கப்படும். இதனால், இறைவன் ஆட்கொள்ளும் இடம் இவ்வுலகம் என்பது கூறப்பட்டது. 10 திருச்சிற்றம்பலம்
|