பக்கம் எண் :

திருவாசகம்
420


21. கோயில் மூத்த திருப்பதிகம்
(தில்லையில் அருளிச்செய்தது)

தில்லையில் திருப்பதிகங்களாக அருளிச்செய்யப்பட்டவற்றுள் இது முதலில் தோன்றியதாதலின், 'கோயில் மூத்த திருப்பதிகம்' என்றாயிற்று. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. இஃது அந்தாதியாய் அமைந்துள்ளது.

அநாதியாகிய சற்காரியம்

இறைவனது தோற்றமு முடிவும் இல்லாத நிலையான செயல்.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும்அரு ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.

பதப்பொருள் : பொன் அம்பலத்து - பொற்சபையில் ஆடுகின்ற, எம் முடியா முதலே - எம் ஈறில்லா முதல்வனே, உடையாள் - எம்மை ஆளாகவுடைய உமையம்மை, உன்தன் நடு இருக்கும் - சொரூப நிலையில் உன்னிடையே அடங்கித் தோன்றும், உடையாள் நடுவுள் - உடையவளாகிய உமையம்மையினிடத்தே, நீ இருத்தி - தடத்த நிலையில் நீ அடங்கித் தோன்றுவாய், அடியேன் நடுவுள் - அடியேன் இடையே, இருவீரும் இருப்பதானால் - நீங்கள் இருவீரும் இருப்பது உண்மையானால், என் கருத்து முடியும் வண்ணம் - என் எண்ணம் நிறைவேறும்படி, முன் நின்று - எனக்கு முன்னே நின்று, அடியேன் - அடியேனாகிய யான், உன் அடியார் நடுவுள் இருக்கும் - உனது அடியார் நடுவில் இருக்கின்ற, அருளைப் புரியாய் - திருவருளைச் செய்வாயாக.

விளக்கம் : 'உடையாள் உன்றன் நடு இருக்கும்' என்றது, சிவம் உலகை நோக்காது அறிவே வடிவமாய் இருக்கும்போது, சத்தி சிவத்தில் அடங்கி அதன் வயமாய் நிற்றலை. இதுவே சிவத்தின் சொரூப நிலை அல்லது உண்மை நிலையாம். 'உடையாள் நடுவுள் ந இருத்தி' என்றது, உலகத்தை நோக்கி அருள் புரிய வரும்போது சிவம் சத்தியில் அடங்கி அதன் வயமாய் நிற்றலை. இதுவே சிவத்தின் தடத்த நிலை அல்லது அருள் நிலை. ஆதலின், சிவம் வேறு, சத்தி வேறு அல்ல; இரண்டும் ஒன்றேயாம்.