பக்கம் எண் :

திருவாசகம்
421


'அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பது' என்றது, இறைவன் சிவம் சக்தி என்னும் இரு நிலையோடும் உயிருள் கலந்திருத்தலை. 'அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரிதலாவது' திருப்பெருந்துறையில் காட்சி கொடுத்து மறைந்த போது உடன் அழைத்துச் சென்ற அடியவர்களோடு அடிகளைச் சேர்த்தல்; அதாவது, வீட்டு நிலையை அருளல் என்பதாம். இனி, இத்திருப்பாடலுக்குப் பஞ்சாக்கரத்தோடு பொருத்தி உரை காண்டலும் உண்டு.

இதனால், அடியார் கூட்டச் சிறப்புக் கூறப்பட்டது.

1

முன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே.

பதப்பொருள்: பொன்னம்பலக் கூத்து உகந்தானே - பொற்சபையில் திருநடனஞ்செய்வதை விரும்பியவனே, பெம்மானே - பெருமானே, முன்னம் - முன்னே, எனை - அடியேனை, முன் நின்று ஆண்டாய் - எதிரே தோன்றி ஆட்கொண்டாய், யானும் - நானும், அதுவே முயல்வுற்று - அதன் பொருட்டாகவே முயன்று, பின்நின்று - உன் வழியிலே நின்று, ஏவல் செய்கின்றேன் - பணி செய்கின்றேன், பிற்பட்டு ஒழிந்தேன் - ஆயினும், பின்னடைந்து விட்டேன், என் - என்னை, இன்று வர நின்றருளி - இன்று உன்பால் வரும்படி அருளி. போந்திடு என்னாவிடில் - 'வா' என்று அழையாவிடில், அடியார் - அடியவர், உன் நின்று - உன்னிடத்தில் நின்று, இவன் ஆர் என்னாரோ - இவன் யார் என்று கேட்க மாட்டார்களோ?

விளக்கம்: அதுவே முயல்வுறுதலாவது, அவன் திருவடியைச் சேர்வதனையே பொருளாகக்கொண்டு முயலுதல். இறைவன் திருவருள் இல்லையெனில் அதுவும் அடைய முடியாதாதலின், வர நின்றருளி, 'போந்திடு' என்று அவனே அழைக்க வேண்டுமென விரும்புகிறார். நீ அழையாவிடில் உன் அடியார்கள் என்னை அயலானாகக் கருதுவார் என்பார், 'அடியார் உன்னின்றிவனாரென்னாரோ?' என்றார்.

இதனால், இறைவன் திருவடியின்பத்திற்கு அவன் அடியார் கூட்டம் இன்றிமையாதது என்பது கூறப்பட்டது.

2

உகந்தா னேஅன் புடைஅடிமைக் குருகா வுள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால் தக்க வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே.