பக்கம் எண் :

திருவாசகம்
422


பதப்பொருள்: பொன்னம்பலத்து - பொற்சபையில் ஆடுகின்ற, எம் முழுமுதலே - எங்கள் முழுமுதற்பொருளே, அன்பு உடை அடிமைக்கு - அன்போடு செய்யப்படும் தொண்டின்பொருட்டு, உகந்தானே - என்னை விரும்பி ஏற்றுக்கொண்டவனே, மகந்தான் செய்து - தம் உடலையே அவியாகத் தீயில் இட்டு, வழி வந்தார் - உன் வழியிலே வந்தவர்கள், வாழ - பேரின்பத்தில் வாழும்படி, வாழ்ந்தாய் - எழுந்தருளியிருப்பவனே, உருகா உள்ளத்து - உருகாத மனத்தையுடைய, உணர்வு இலியேன் - அறிவு இல்லாத நான், சகந்தான் அறிய முறையிட்டால் - உலகம் அறிய எனது துன்பத்தைச் சொல்லி முறையிட்டுக்கொண்டால், தக்கவாறு அன்று - அருளாதொழிவது உனக்குத் தகுதி அன்று, என்னாரோ - என்று உன் அடியார்கள் சொல்லமாட்டார்களோ? அடியேற்கு - அடியேனுக்கு, உன் - உனது, முகந்தான் தாராவிடில் - திருமுகத்தைத்தானும் காட்டாவிட்டால், முடிவேன் - யான் இறந்துபடுவேன்.

விளக்கம்: 'எய்த வந்திலாதார் எரியிற் பாயவும்' என்று கீர்த்தித்திருவகவலில் குறித்ததனையே இங்கு மகம் செய்ததாகக் கூறினார். உம்மிடத்தில் முறையிட்டுக்கொண்ட பின்பும் நீர் அருளாதொழியின் பலரும் அறிய முறையிடுவேன் என்பார், 'சகந்தான் அறிய முறையிட்டால்' என்றும், உமது திருவருளுக்கு யான் தகுதியுடையேன் என்று கூறுகின்றிலேன் என்பார், 'உணர்விலியேன்' என்றும், எனினும், என்னைத் தள்ளிவிடின், ஆண்டுகொண்ட உமக்குப் பழியாகும் என்பார், 'தக்கவாறு அன்று என்னாரோ?' என்றுங்கூறினார். முகந்தருதலாவது, திருநோக்கம் பாலித்தல்.

இதனால், திருவடி இன்பம் பெற இறைவன் அருள் வேண்டும் என்பது கூறப்பட்டது.

3

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்றனக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்திரள் வான்குழுமிக்
கெழுமுத லேஅருள் தந்திருக் கஇரங் குங்கொல்லோஎன்
றழுமது வேயன்றி மற்றென்செய் கேன்பொன்னம் பலத்தரைசே.

பதப்பொருள்: பொன்னம்பலத்து - பொற்சபையில் ஆடுகின்ற, அரைசே - நாதனே, முழுமுதலே - எல்லாவற்றுக்கும் ஆதியான பொருளே, ஐம்புலனுக்கும் - ஐம்புலன்களுக்கும், மூவர்க்கும் - முத்தேவர்களுக்கும், என்றனக்கும் - எனக்கும், வழி முதலே - செல்லும் வழிக்கு முதலானவனே, நின் பழ அடியார் திரள் - உன்னுடைய பழைய அடியார் கூட்டத்தோடு, வான்குழுமி - பெருமை மிக்க சிவலோகத்திலே கூடி, கெழுமுதலே - சேர்ந்திருத்தலை, அருள் தந்து இருக்க - திருவருளால் கொடுத்தருள, இரங்கும் கொல்லோ என்று - இரங்குமோ என்று, அழும் அதுவே அன்றி - அழுவதல்லாமல், மற்று என் செய்கேன் - வேறு என்ன செய்ய வல்லேன்?