விளக்கம் : ஐந்து சீர் கொண்ட அடிகளையுடைய பாடல் இது. இவ்வோரு பாடல் கலித்துறையாய் வந்தது என்க. 'ஐம்புலனுக்கும்' என்றமையால் பிற தத்துவங்களையுங் கொள்க. இறைவன் எல்லாத் தத்துவங்களையும் இயக்கிக்கொண்டிருப்பவனாதலின், தத்துவங்களுக்கும் முதல் என்றார். கெழுமுதல் - சேர்ந்திருத்தல்; தொழிற்பெயர். இறைவன் அருளைப் பெறுவதற்கு அழுதலேயன்றி உரிமையின்று என்பார், 'அழுமதுவேயன்றி மற்றென் செய்கேன்' என்று இரங்குகிறார். இதனால், இறைவன் அருளைப் பெறுவதற்கு அழுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. 4 அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைசேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால் பிரைசேர் பாலில் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ? பதப்பொருள் : அரைசே - அரசனே, பொன்னம்பலத்து ஆடும் அமுதே - பொற்சபையில் நடிக்கின்ற அமுதே, என்று - என்று வாழ்த்தி, உன் அருள் நோக்கி - உன் திருவருளை எதிர்பார்த்து, இரைதேர் கொக்கு ஒத்து - இரையைத் தேடுகின்ற கொக்கினைப் போன்று, இரவு பகல் - இரவும் பகலும், ஏசற்று இருந்து வேசற்றேன் - கவலைப்பட்டிருந்து இளைத்தேன், கரை சேர் - முத்திக்கரையை அடைந்த, அடியார் - உன்னடியார், களி சிறப்ப - மகிழ்ந்திருப்ப, காட்சி கொடுத்து - நீ காட்சி கொடுத்தருளி, உன் அடியேன்பால் - உன்னடியேனாகிய என்னிடத்தில், பிரைசேர் பாலில் நெய் போல - பிரை ஊற்றிய பாலில் நெய் இருப்பது போல, பேசாது இருந்தால் - வெளிப்படாமல் மறைந்து இருந்தால், ஏசாரோ - உலகத்தார் வையமாட்டார்களோ? விளக்கம் : இரை தேர் கொக்கொத்திருத்தலாவது, மனத்தை ஒருமைப்படுத்தி இரையாகிய மீன் ஒன்றையே நாடி இருக்கும் கொக்கைப் போன்று, அருள் ஒன்றையே நாடி நிற்றலாம். பிரைசேர் பால் என்றது, தயிர் என்பதாம். பாலில் நெய் மறைந்து நிற்கும்; ஆனால், தயிரில் நெய் வெளிப்பட்டு நிற்கும். அதனால் பிரைசேர் பாலைப் போலப் பேச வேண்டும் என்றார். அவ்வாறு பேசாவிடில் உனக்குப் பழியாகும் என்பார், 'பேசாதிருந்தால் ஏசாரோ?' என்றார். இறைவன் மறைந்து நிற்றற்குப் பாலில் நெய்யையும், வெளிப்பட்டு நிற்றற்குத் தயிரில் நெய்யையும் எவ்விடத்திலும் உவமையாகச் சொல்லப்படுதல் அறிந்துகொள்க. இதனால், மன ஒருமைப்பாடு அடியார் கூட்டத்தில் சேர்க்கும் என்பது கூறப்பட்டது. 5
|