பதப்பொருள் : நம்பி - தலைவனே, சிரிப்பார் - பழைய அடியார்கள் சிரிப்பார்கள், களிப்பார் - மகிழ்வார்கள், தேனிப்பார் - இன்புறுவார்கள், திரண்டு திரண்டு - கூடிக்கூடி, உன் திருவார்த்தை விரிப்பார் - உனது திருநாமத்தைக் கூறுவார்கள், கேட்பார் - சிலர் கேட்பார்கள், மெச்சுவார் - அதனைப் பாராட்டுவார்கள், வெவ்வேறு இருந்து - தனித்தனியேயிருந்து, உன் திருநாமம் தரிப்பார் - உனது திருநாமத்தை நெஞ்சிலே ஊன்றுவார்கள், பொன்னம்பலத்து ஆடும் - பொற்சபையின் கண்ணே நடிக்கின்ற, தலைவா என்பார் - இறைவா என்று துதிப்பார்கள், அவர் முன்னே - அவர்கள் எதிரில், நாயேன் - நாய் போன்றவனாகிய யான், நரிப்பாய் இருப்பேனோ - இகழ்ச்சியுடையவனாய் இருப்பேனோ? நல்காய் - இனியேனும் அருள் புரிவாயாக. விளக்கம் : முகத்தில் தோன்றுவது சிரிப்பு. உள்ளத்தில் பூரிப்பது களிப்பு. ஆதலின், இரண்டன் வேறுபாட்டைக் காண்க. தேனித்தலாவது, தேன் போன்று இனித்தல். இறையனுபவம் இனிமையாயிருக்கும் என்பதாம். திருவார்த்தை விரித்தலாவது, அவனது புகழைப் பேசுதல். திருநாமம் தரித்தல், அஞ்செழுத்தை உள்ளத்திலே கொள்ளுதல். இதுவே ஜெபம் எனப்படும். 'பொன்னம்பலத்தாடும் தலைவா என்பார்' என்பது, பல வகைப் பெயர்களையும் சொல்லிப் பாடுதலைக் குறித்தது; நாம பஜனையைக் கொள்ளலாம். நரிப்பு - இகழ்ச்சி. இதனால், அடியாரது இயல்பு கூறப்பட்டது. 9 நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப் பல்கா லுன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. பதப்பொருள் : என்னை உடையானே - என்னையாளாக உடையவனே, நமக்கு நல்காது ஒழியான் என்று - நமக்கு இறைவன் அருள் புரியாது போகான் என்று எண்ணி, உன் நாமம் பிதற்றி - உனது திருநாமமாகிய அஞ்செழுத்தைப் பல்கால் கூறி, நயனம் - கண்கள், நீர் மல்கா - நீர் பெருகி, வாய் வாழ்த்தா - வாயால் வாழ்த்தி, குழறா - குழறி, வணங்கா - மெய்யால் வணங்கி, மனத்தால் நினைந்து உருகி - மனத்தினாலே எண்ணிக் கனிந்து, பல்கால் உன்னைப் பாவித்து - பலகாலும் உனது உருவத்தைத் தியானித்து, பொன்னம்பலம் என்றே - பொற்சபையென்றே, பரவி - துதித்து, ஒல்கா நிற்கும் - தளர்வுற்றிருக்கும், உயிர்க்கு - உயிராகிய எனக்கு, இரங்கி அருளாய் - இரங்கி அருள்புரிவாயாக.
|