திறமை மிக்க பெருமானே, என் மனத்தினுள்ளே - என்னுடைய மனத்தின்கண்ணே, வரும் பெருமான் - தோன்றுகின்ற பெருமானே, மலரோன் நெடுமால் - பிரமனும் திருமாலும், அறியாமல் நின்ற - காணாமல் திகைத்து நின்ற, அரும்பெருமான் - அரிய பெருமானே, அடியேன் - அடியேனாகிய யான், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம். விளக்கம் : பெரும்பித்தைத் தருதலாவது, அவனையே நினைந்திருக்கச் செய்தல். சதுரப்பாடாவது, மல வாதனையையொழித்துப் பிறவியைக் களைதலாம். 'தம்மை மறந்து தனை நினைப்பவர் செம்மை மனத்துள்ளே' தோன்றுவானாதலின், 'மனத்தினுள்ளே வரும் பெருமான்' என்றார். இதனால், இறைவன் தன்னை நினைவாரது உள்ளத்தில் வருகின்ற கருண கூறப்பட்டது. 3 பொழிகின்ற துன்பப் புயல்வெள் ளத்தில்நின் கழற்புணைகொண் டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் சுழியென்று மாதர் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்ற னன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. பதப்பொருள் : உடையாய் - உடையவனே, புயல் பொழிகின்ற - வினையாகிய மேகம் பொழிகின்ற, துன்ப வெள்ளத்தில் - துன்பமாகிய வெள்ளத்தில், இழிகின்ற அன்பர்கள் - இழிந்து செல்லுகின்ற அடியார்கள், நின் கழல் - உன் திருவடியாகிய, புணை கொண்டு - தெப்பத்தைப் பற்றிக்கொண்டு, வான் ஏறினர் - சிவலோகமாகிய கரையை ஏறினார்கள், யான் - அடியேன், இடர்க் கடல்வாய் - துன்பமாகிய கடலில், சுழி சென்று - சுழலில் அகப்பட்டு, மாதர் திரை பொர - பெண்களாகிய அலைகள் மோத, காமச் சுறவு எறிய - ஆசையாகிய சுறாமீன் கதுவ, அழிகின்றனன் - வேதனைப்படுகின்றேன், அடியேன் - யான், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம். விளக்கம் : துன்ப வெள்ளம் என்றது, பிறவிப் பொருங்கடலை. வெள்ளம் என்றது பிறவியை. ஆதலால், புயல் என்றது வினையாயிற்று. மழைக்குக் காரணம் மேகம் என்றாற்போலப் பிறவிக்குக் காரணம் வினை என்பதாம். மாதர் அலைத்தலைச் செய்வராதலின், மாதரைத் திரையாகக் கூறினார். சுறவின் வாய்ப்பட்டோர் உய்ய முடியாதது போல, காமத்தின் வசப்பட்டோரும் உய்ய முடியாதாதலின், 'காமச் சுறவெறிய' என்றார். இதனால், இறைவன் பிறவிக் கடலுக்குத் தோணியாய் இருக்கிறான் என்பது கூறப்பட்டது. 4
|