'பொல்லாப் புழுமலி நோய்ப் புன் குரம்பை' என்றார் பிறரும். அழுக்கு மனமாவது, பக்குவம் பெறாத மனமாம். பக்குவம் பெறுவதற்கு அடைக்கலமே வழி என்க. தம்மை அடைக்கலப் பொருளாகக் கூறியதற்கேற்ப, இறைவனை அதனை உடையவன் என்பார், 'உடையாய்' என்றார். இதனால், வாசனாமல நீக்கத்துக்கு இறைவனிடம் அடைக்கலம் புகுவதே வழி என்பது கூறப்பட்டது. 1 வெறுப்பன வேசெய்யு மென்சிறு மையைநின் பெருமையினாற் பொறுப்பவ னேஅராப் பூண்பவ னேபொங்கு கங்கைசடைச் செறுப்பவ னேநின் திருவரு ளாலென் பிறவியைவேர் அறுப்பவ னேஉடை யாய்அடி யேனுன் அடைக்கலமே. பதப்பொருள் : உடையாய் - உடையவனே, வெறுப்பனவே செய்யும் - வெறுக்கத் தக்கனவாகிய தீமைகளையே செய்கின்ற, என் சிறுமையை - எனது இழிவுத்தன்மையை, நின் பெருமையினால் - உன்னுடைய பெருந்தன்மையினால், பொறுப்பவனே - பொறுத்துக் கொள்பவனே, அராப் பூண்பவனே - பாம்பையணிவோனே, பொங்கு - பெருகுகின்ற, கங்கை - கங்கையை, சடை - சடையின்கண், செறுப்பவனே - அடக்குவோனே, நின் திருவருளால் - உனது திருவருளால், என் பிறவியை - என்னுடைய பிறவியை, வேர் அறுப்பவனே - வேரோடுங் களைவோனே, அடியேன் - அடியேனாகிய யான், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம். விளக்கம் : பாம்பின் பிழையைப் பொறுத்து ஏற்றுக்கொண்டது போல, என் பிழையைப் பொறுத்து ஏற்றுக்கொண்டாய் என்றும், கங்கையின் ஆற்றலையடக்கி உலகினை அழிவினின்றும் காத்தது போல, வினையின் ஆற்றலையடக்கி என்னைத் துன்பத்தினின்றும் காத்தாய் என்றும் ஒன்றுக்கொன்று பொருத்தமாய்க் கூறிய அழகினைக் காண்க. பிறவிக்கு வேர், வினை என்பதாம். இதனால், இறைவனது பிழை பொறுக்கும் பெருமை கூறப்பட்டது. 2 பெரும்பெரு மான்என் பிறவியை பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என் மனத்தினுள்ளே வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி யாமல்நின்ற அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. பதப்பொருள் : உடையாய் - உடையவனே, பெரும்பெருமான் - தேவதேவனே, என் பிறவியை - என் பிறப்பை, வேர் அறுத்து - வேரோடு களைந்து, பெரும்பிச்சு - உன்மீது மிகுந்த பேரன்பினை, தரும் பெருமான் - எனக்கு அருளும் தேவனே, சதுரப் பெருமான் -
|