வணங்குவேன் - எக்காலத்து வணங்குவேன், அடியேன் - யான், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம். விளக்கம் : மாழை என்பது மாமரம்; அது இங்குக் கண்ணுக்கு உவமையாகக் கூறப்பட்டமையால், அதன் வடுவுக்காயிற்று; முதலாகுபெயர், 'தயிர் போல்' என்றது குழம்புதலுக்கு உவமை. தொழில் உவமம். மத்தால் கடையப்பட்ட தயிர் சிதறுவது போல, மாதரால் அலைக்கப்பட்ட மனம் சிதறும் என்பதாம். இதனால், திருவடி ஞானம் பெற விழைவு வேண்டும் என்பது கூறப்பட்டது. 6 மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டு புன்கணனாய்ப் புரள்வேனைப் புரளாமற் புகுந்தருளி என்கணிலே யமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும் அங்கணனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே. பதப்பொருள் : உடையாய் - உடையவனே, மின் கணினார் - ஒளிர்கின்ற கண்களை உடையவரும், நுடங்கும் இடையார் - துவளுகின்ற இடையையுடையவரும் ஆகிய மாதரது, வெகுளி வலையில் அகப்பட்டு - புலவியாகிய வலையில் அகப்பட்டு, புன்கணன் ஆய் - துன்பத்தையுடையவனாய், புரள்வேனை - உழலுகின்ற என்னை, புரளாமல் - அவ்வாறு உழலாவண்ணம், புகுந்தருளி - வலிய வந்து ஆட்கொண்டருளி, என்கணிலே - என்னுடைய கண்ணிலே, அமுது ஊறி - அமுதம் சுரந்தது போன்று, தித்தித்து - இனித்து, என் பிழைக்கு இரங்கும் - என் குற்றங்களைப் பொறுத்து இரங்குகின்ற, அங்கணனே - அருளுடையவனே, அடியேன் - யான், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம். விளக்கம் : புலவி, சிறு கோபம். இது காம இன்பத்துக்கு இன்றியமையாதது. 'உப்பமைந்தற்றால் புலவி' என்றார் நாயனாரும். உணவுக்கு உப்பு இன்றியமையாதவாறு போலக் காம இன்பத்துக்குப் புலவி இன்றியமையாதது. புலவியே இங்கு வெகுளி எனப்பட்டது. குருவாகி வந்து ஆட்கொண்ட திருக்கோலத்தை அடிகள் எஞ்ஞான்றும் மறவாது கண்டு இன்புற்றிருந்ததையே இங்கு, 'என்கணிலே அமுதூறித் தித்தித்து' என்றார். 'கண்ணா ரமுதக் கடலே போற்றி' என்றும், 'கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடி' என்றும் முன் கூறியுள்ளவற்றையும் நினைக்க. துன்பத்தினின்றும் எடுத்து இன்பத்தை அருளினமையால், 'அங்கணனே' என்றார். இதனால், இறைவன் திருக்காட்சி இன்பம் தருவது என்பது கூறப்பட்டது. 7
|