மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன் பாவிடை யாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம் ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. பதப்பொருள் : உடையாய் - உடையவனே, மாவடு வகிர் அன்ன - மாவடுவின் பிளவு போன்ற, கண்ணி - கண்களையுடைய உமா தேவியின், பங்கா - பாகத்தையுடையனே, நின் - உன்னுடைய, மலர் அடிக்கே - மலர் போலும் திருவடிக்கே, கூவிடுவாய் - என்னை அழைத்துக்கொள்வாய், கும்பிக்கே இடுவாய் - அல்லது என்னை நரகத்திலே தள்ளுவாய், நின் குறிப்பு அறியேன் - இவைகளில் உன் திருவுள்ளக் குறிப்பு இன்னது என்பதை யான் அறிந்திலேன் : அதனால், உள்ளம் - என் மனம், பா இடை ஆடு - நூற்பாவினூடே ஓடுகின்ற, குழல் போல் - குழல் போல, கரந்து - துன்பத்துள் மூழ்கி, பரந்தது - உழல்கின்றது, ஆ கெடுவேன் - ஐயோ கெடுவேன், அடியேன் - யான், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம். விளக்கம் : பா என்பது, ஆடை நெய்வதற்கு நீளத்தில் அமைக்கும் நுல். குழல் என்பது நூலைக் குறுக்காகச் செலுத்தும் கருவி. இது வலமும் இடமும் உழன்றுகொண்டே இருக்கும். இறைவன் சுதந்தரம் உடையவன் ஆகலின், என்னைத் தனது திருவடியில் சேர்த்துக்கொள்வானோ அல்லது நரகத்தில் தள்ளிவிடுவானோ, அதை என்னால் அறிய முடியவில்லை என்பார், 'நின் மலரடிக்கே கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய்' என்றார். ஆகவே, இதனை அறிய முடியாமையால் உண்டாகிய மன வருத்தத்தையே, 'பாவிடை ஆடு குழல்போல் கரந்து பரந்தது உள்ளம்' என்றார் என்க. இதனால், இறைவனது திருக்குறிப்பை உணர முடியாது என்பது கூறப்பட்டது. 8 பிறிவறி யாஅன்பர் நின்னருட் பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார்உன்னை வந்திப்பதோர் நெறியறி யேன்நின்னை யேயறி யேன்நின்னை யேயறியும் அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே. பதப்பொருள் : உடையாய் - உடையவனே, பிறிவு அறியா அன்பர் - உன்னை விட்டு நீங்குதல் அறியாத அடியார்கள், நின் - உனது, அருள் - அருளையுடைய, பெய்கழல் - இடப்படும் வீரக்கழலையணிந்த, தாள் இணைக்கீழ் - திருவடியிணையின் கீழே, வந்து - வந்து, மறிவு அறியா - மீண்டும் பிறவிக்குத் திரும்புதலை அறியாத, செல்வம் பெற்றார் - வீட்டுச் செல்வத்தினைப் பெற்றார்கள்; அடியேன் - யானோ, உன்னை வந்திப்பது - உன்னை வணங்குதலாகிய, ஓர் - ஒரு, நெறி அறியேன் - நல்ல வழியை அறிய
|