பக்கம் எண் :

திருவாசகம்
462


அருமையானவனும், அடியார்க்கு எளியவன் - அன்பர்க்கு எளியவனாவனும், பொன்னை வென்றது - பொன்னினது நிறத்தையும் பிற்படச் செய்த, ஓர் - ஒப்பற்ற, புரிசடை முடிதனில் - கட்டப்பட்ட சடை முடியில், இளமதி வைத்த - பிறைச்சந்திரனை அணிந்த, அன்னை - எம் தாய் போன்றவனும் ஆகிய இறைவன், முன்னை - முற்பிறவியில் செய்த, என்னுடை - என்னுடைய, வல்வினை போயிட - கொடிய வினைகள் அழிய, ஆண்டு - என்னை ஆண்டருளி, தன் அடியரில் கூட்டிய - தன்னுடைய அடியார்களோடு சேர்த்த, அதிசயம் கண்டாம் - அதிசயத்தைப் பார்த்தோம்.

விளக்கம் : ஆன்மாக்களுக்கு எப்பிறவியிலும் அழியாத தந்தையும் தாயுமாய் இருப்பவன் இறைவனாதலின், ‘எந்தை’ என்றும், ‘அன்னை’ என்றும் கூறினார். ‘அம்மை நீ அப்பன் நீ’ என்றார், திருநாவுக்கரசரும். இறைவனது சடை செம்மை நிறமாதலின், ‘பொன்னை வென்றதோர் புரிசடை’ என்றார். இறைவன், அடிகளுக்குக் குருவாய் வந்து பழவினைகளைப் போக்கினானாதலின், ‘முன்னை என்னுடை வல்வினை போயிட’ என்றார்.

இதனால், வினைகள் ஒழிவது இறைவன் திருவருளாலே என்பது கூறப்பட்டது.

3

பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம் இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே
செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.

பதப்பொருள் : எனை உலகவர் - என்னை உலகத்தவர், பித்தன் என்று பகர்வது - பித்தன் என்று சொல்வதற்கு உள்ள, ஓர் காரணம் - ஒரு காரணத்தை, கேளீர் - அடியவர்களே கேட்பீராக, ஒத்துச் சென்று - திருவருளுக்கு மாறுபடாமல் நடந்து சென்று, தன் திருவருள் கூடிடும் - அத்திருவருளோடு கலந்து நிற்கும்படியான, உபாயம் அறியாமே - தந்திரம் அறியாமல், செத்துப்போய் - வீணே துன்பத்தையுடைய நரகத்தில், வீழ்வதற்கு - விழுந்து வருந்துவதற்கு, ஒருப்படுகின்றேனை - இசைகின்ற என்னை, அத்தன் - எம் தந்தையாகிய சிவபெருமான், ஆண்டு - ஆட்கொண்டருளி, தன் அடியரில் கூட்டிய - தம் அடியார்களோடு சேர்த்த, அதிசயம் கண்டாமே - அதிசயத்தைக் கண்டு நின்றோமல்லவா? இது - இதுவே அக்காரணமாகும்.

விளக்கம் : பித்தன் என்று கூறுதற்குக் காரணமாவது, அடிகள் தம் நினைவின்றியிருந்ததையாம். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியார் பித்தரைப் போன்றிருப்பர் என்பதாம். ‘பித்தனிவனென